கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா: ஜெயலலிதா வழக்கில் முக்கிய பங்காற்றியவர்

கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா: ஜெயலலிதா வழக்கில் முக்கிய பங்காற்றியவர்
Updated on
2 min read

கர்நாடக அரசின் தலைமை வழ‌க்கறிஞர் ரவிவர்ம குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக முதல்வ‌ர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்திய இவர் கடந்த 2 ஆண்டுகளில் 2-வது முறையாக ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக‌ சித்தராமையா பொறுப்பேற்றதும், அரசின் தலைமை வழக்கறிஞராக பேராசிரியர் ரவிவர்ம குமார் நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் ஆஜராகி வந்தார். இந்நிலையில் கர்நாடக அரசு கூடுதல் தலைமை வழக்கறி ஞர்களாக தேவதத் காமத் மற்றும் ராகவேந்திர நான கவுடா ஆகியோரை நியமித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், 'எனது பரிந்துரையை கருத்தில் கொள்ளாமல் தன்னிச் சையாக கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை அரசு நியமித்தது தவறு' என முதல்வர் சித்தராமையாவுக்கும், சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா வுக்கும் கடிதம் எழுதினார். கர்நாடக அரசில் உரிய விளக்கம் அளிக்கப்படாததால், ரவிவர்ம குமார் அதிருப்தி அடைந்தார்.

இதையடுத்து நேற்று முன் தினம் சித்தராமையாவை சந்தித்த ரவிவர்ம குமார் தனது ராஜினாமா முடிவை தெரிவித்தார். அதனை சித்தராமையா ஏற்க மறுத்ததால், ரவிவர்ம குமார் முதல்வரின் அலுவலகத்துக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியை சந்திப் பதற்காக சித்தராமையா டெல்லிக்கு சென்றுள்ளதால் அவர் பெங்களூரு திரும்பிய பிறகே ரவிவர்ம குமாரின் ராஜினாமா குறித்து முடிவெடுப்பார் என தெரிகிறது. அரசு தலைமை வழக்கறிஞராக காவிரி, கிருஷ்ணா, மகதாயி ஆகிய நதி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய வழக்குகளில் திறம்பட செயல்பணியாற்றியுள்ளார்.

2-வது முறை

கடந்த ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கர்நாடக அரசு, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற்றுத்தந்த‌ மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமனை வழக்கறிஞராக நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரவிவர்ம குமார், “ஒரு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாதிடும் ஃபாலி எஸ்.நாரிமன் தமிழக அரசுக்கு எதிராக எப்படி வாதிடுவார்?''என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராஜி னாமா செய்தார். ஆனால் அதனை சித்தராமையா ஏற்க மறுத்துவிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக அரசே மேல்முறையீடு செய்யலாமா? என அம்மாநில முக்கிய அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ரவிவர்ம குமார், கர்நாடகா கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இல்லாவிடில் கர்நாடக அரசின் நீதித்துறை மீதே ஊழல் கறை விழும் என எச்சரித்து மேல்முறையீடு செய்ய அழுத்தம் கொடுத்தார்.

இதே போல ஜெயலலிதா வழக்கில் இருந்து விலகிய மூத்த வழக்கறிஞர் ஆச்சார் யாவை மீண்டும் இவ்வழக்கில் ஆஜராக செய்தார். மேல்முறை யீட்டு மனுவை தயாரிப்பதில் ஆச்சார்யாவுக்கு பல்வேறு முக்கிய சட்ட ஆலோசனை களையும் வழங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in