

தீவிரவாதத்தை தூண்டும் வகை யில் பேசி வரும் இஸ்லாமிய மதபோதகரின் மும்பை அலு வலகத்தில் போலீஸார் குவிக் கப்பட்டுள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்கா வில் உள்ள ஓட்டலில் கடந்த 1-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப் பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவனான ‘அவாமி லீக்’ தலைவரின் மகன் ரோஹன் இம்தியாஸ், இந்திய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு தீவிர வாதத்துக்கு மாறி உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து நாயக்கின் பேச்சுகளை மேற்கோள் காட்டி பல கருத்து களை முகநூலில் ரோஹன் வெளியிட்டுள்ளான்.
மும்பையை சேர்ந்த இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டே ஷனை நிறுவிய ஜாகீர் நாயக், தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகை யில் பேசி வருகிறார். குறிப்பாக ‘பீஸ் டிவி’ என்ற சர்வதேச இஸ்லாமிய தொலைக்காட்சியில் நாயக் பேசுகையில், ‘‘எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக மாற வேண்டும்’’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற மதங்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவ தால், நாயக்கின் பவுண்டேஷ னுக்கு இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. மேலும், மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், தெற்கு மும்பையில் டோங்கிரி பகுதியில் உள்ள நாயக்கின் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக நேற்று ஏராளமான போலீ ஸார் குவிக்கப்பட்டனர் என்று மும்பை போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
‘‘ஜாகீர் நாயக்கின் பேச்சுகள் மிகவும் கவலை அளிக்கின்றன. அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு நேற்றுமுன்தினம் கூறியிருந்தார். இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பொறுப்பு போலி ஸுக்கு உள்ளதால், நாயக்கின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’’ என்றனர்.
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்குடன் ஒரே மேடையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பங்கேற்ற வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக், தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் ஜாகீர் நாயக்குடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பங்கேற்ற வீடியோ வெளியாகி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் திக்விஜய் சிங் பேசிய விவரம் முழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
அதில், ‘‘ஜாகீர் நாயக்குக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் அவர் மீது இந்தியாவும், வங்கதேசமும் நடவடிக்கை எடுக்கட்டும். நான் மதநல்லிணக்கத்தை வலியுறுத்துகிறேன். மத அடிப்படைவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் எதிர்க்கிறேன்’’ என்று திக்விஜய் சிங் பேசியுள்ளார்.
தீவிரவாதத்தை தூண்டி வரும் நாயக்குடன் ஒரே மேடையில் திக்விஜய் சிங் பங்கேற்றுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் காந்த் சர்மா நேற்று கூறியதாவது:
மனிதகுலத்துக்கு தீவிரவாதம் விரோதியாக உள்ளது. நேரடியாகவோ மறைமுகமாகவோ தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் குற்றவாளிகள்தான். ஜாகீர் போன்றவர்கள் இந்த தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு முடிவெடுக்க வேண்டும். தீவிரவாதத்தை தூண்டும் வகையில் நாயக் பேசி வருவது தெளிவாக தெரிகிறது. தீவிரவாதிகளை ‘சாப்’ என்றும் ‘ஜி’ என்றும் அழைப்பது காங்கிரஸுக்கு வழக்கமானது. இவ்வாறு காந்த் சர்மா கூறினார்.