சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூரு சிறையில் அடைப்பு

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூரு சிறையில் அடைப்பு
Updated on
2 min read

நீதிமன்றத்தில் சரணடைந்தனர் | ‘ஏ’ கிளாஸ் வசதி அறை

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேற்று மாலை பெங்களூரு சிறையில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதியின் உத்தரவின்பேரில் மூன்று பேரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவ ராய் அடங்கிய அமர்வு, நால்வரும் குற்றவாளிகள் என்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது. முதல் குற்றவாளியான‌ ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மூவரும் உடனடியாக பெங்களூரு நீதிமன்றத் தில் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே சசிகலாவும், இளவரசியும் தங்கள் உறவினர்கள், அதிமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் சகிதமாக காரில் சென்னையில் இருந்து பெங்களூ ருவுக்கு புறப்பட்டனர்.

பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு

ஓசூரை கடந்து கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்குள் நுழைந்த சசிகலாவின் காருக்கு பெங்களூரு மாநகர‌ போலீஸார் பலத்த பாதுகாப்பு அளித்தனர். இதேபோல சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் சரணடையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகம், நீதிமன்றம் ஆகிய இடங்களிலும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சசிகலாவின் கணவர் ம.நடராசன், மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் சிறை வளாகத்துக் குள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 5.15 மணியளவில் 10 கார்கள் புடை சூழ, சசிகலாவும் இளவரசியும் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.

கார் மீது தாக்குதல்

அப்போது தமிழக பதிவெண் கொண்ட 5 கார்கள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் சசிகலாவின் உடை, மருந்து உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்ற வாகனமும் தாக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீ ஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கோரிக்கைகள் நிராகரிப்பு

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்வதா நாராயணா முன்னிலையில் சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சரணடைந்தனர். சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குலசேகரன், செல்வகுமார், மூர்த்தி ராவ் தவிர‌ சசிகலாவின் கணவர் நடராஜன், கர்நாடக அதிமுக நிர்வாகி புகழேந்தி ஆகியோர் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப் பட்டனர். இதனால் சசிகலாவின் உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார், நடராஜனின் சகோதரர் ராமசந்திரன், இளவரசியின் மகன் விவேக், மகள்கள் உள்ளிட்டோர் வெளியே நிறுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி அஸ்வதா நாராயணா, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்கள் தெரியுமா?” எனக்கேட்டு, ச‌சிகலா, இளவரசி ஆகிய இருவரிடமும் தீர்ப்பு நகலில் கையெழுத்து பெற்றார். அப்போது சசிகலாவின் வழக்கறிஞர் குலசேகரன், “சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் நீரிழிவு நோயாளிகள். மூவரும் வருமான வரி செலுத்தக் கூடியவர்கள் என்பதால் ஏ- கிளாஸ் சிறையும், அதற்கான‌ வசதிகளும் வழங்கப்பட வேண்டும். ஏ.சி. அறை, தொலைக்காட்சி பெட்டி, செய்தித் தாள், சசிகலா, இளவரசி ஆகியோ ருக்கு ஒரே அறை, வெந்நீர், மினரல் வாட்டர், மேற்கத்திய ஸ்டைல் டாய்லெட் உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் ஒரே அறையில் தங்கவும், தொலைக்காட்சி பெட்டி, மேற்கத்திய ஸ்டைல் டாய்லெட், வெந்நீர் உள்ளிட்ட வசதிகள் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கைதி எண் 10711

இதையடுத்து சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் அல்சூர்கேட் காவல் நிலைய ம‌களிர் காவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு சசிகலா, இளவரசி ஆகியோரின் அங்க அடையாளங்கள் குறிக்கப்பட்ட பிறகு, மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளக்கப்பட்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி ஆகிய இருவருக் கும் முறையே கைதி எண்கள் 10711, 10712 வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு நடந்து சென்ற சசிகலா தனது கணவர் நடராஜன், உறவினர் டாக்டர் வெங்கடேஷ் உடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் மகளிர் சிறைக்கூடத்தில் ஏ-கிளாஸ் அறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த‌ சுதாகரனும் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பிறகு அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள ஆண்களுக்கான சிறைக்கூடத்தில் தனியாக அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in