மோடி தீபாவளி பயணம்: சியாச்சினில் படையினருடன் சந்திப்பு

மோடி தீபாவளி பயணம்: சியாச்சினில் படையினருடன் சந்திப்பு
Updated on
1 min read

தீபாவளியையொட்டி காஷ்மீர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் ஒரு பகுதியாக, சியாச்சினில் எல்லைப் பாதுகாப்பு ராணுவ வீரர்களை சந்திக்கிறார்.

கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காஷ்மீரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய தால், லட்சக்கணக்கான மக்கள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அந்த மாநிலத்தில் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ. 1,000 கோடியை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. தற்போது அங்கு நிலைமை சீரடைந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் தினமான இன்று (வியாழக்கிமை) பிரதமர் மோடி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு செல்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளை தீபாவளி தினத்தில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கவுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பயணத்தின்போது, காஷ்மீருக்கான வெள்ள நிவாரண நிதியை அவர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்களுடன் சந்திப்பு

காஷ்மீர் மக்களை சந்திப்பதற்கு முன்பு சியாச்சினில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்து, அவர்களுடன் சில மணி நேரம் செலவு செய்வது என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது:

"நண்பர்களே, நான் சியாச்சின் பணிப் பிரதேசத்துக்குச் செல்கிறேன். நமது துணிவுமிக்க ராணுவ வீரர்களுன் சில மணி நேரம் செலவு செய்வதை என் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

சியாச்சினின் தீவிர நிலைமை அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொண்டு, நம் தாய்நாட்டைக் காக்கும் கடமையில் ராணுவ வீரர்கள் உறுதியுடன் அங்கே வீற்றிருக்கின்றனர்.

"குளிரும் பனியும் நம் ராணுவ வீரர்களின் உறுதியை ஒருபோதும் குலைத்தது இல்லை. நம் நாட்டைக் காப்பதற்காக அவர்கள் அங்கே நின்றுகொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களால்தான் உண்மையான பெருமிதம் கிட்டுகிறது.

'தோளோடு தோள்கொடுத்து துணைநிற்போம்' என்ற ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் செய்தியையும் நமது ராணுவ வீரர்களுக்கு எடுத்துச் செல்கிறேன். சியாச்சின் பயணத்துக்குப் பிறகு, ஸ்ரீநகரில் வெள்ளம் பாதித்த மக்களைச் சந்திக்கிறேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in