

ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின்(ஜேஎன்யூ) மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடல் இன்று சென்னை அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்கிறது.
டெல்லியில் ஜேஎன்யூவின் மாணவர் முத்து கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கள்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தையான ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் நேற்று புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவருடன் டெல்லி போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தையில் பிரேதப்பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டது. இதில் ஜீவானந்தம் இட்ட நிபந்தனையின்படி, தலித் சமூகத்தின் இரு மருத்துவர்களும் பிரேதப்பரிசோதனையின் போது உடன் இருப்பார்கள் எனத் கருதப்படுகிறது.
இந்த குழுவில், டெல்லி காவல்துறையின் துணை ஆணையர்களில் ஒருவரும் சேலத்தை சேர்ந்தவருமான மனோஜ்.சி. ஐபிஎஸ் அதிகாரியும் இடம் பெற்றுள்ளார்.
இதனால், முத்து கிருஷ்ணன் உடல் இன்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு மதியத்திற்கு முன்பாக டெல்லியில் இருந்து சென்னைக்கோ அல்லது பெங்களூருவுக்கோ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. பின்னர், அங்கிருந்து சேலத்திற்கு சாலை வழியாக இன்று மாலைக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்கிறது. இந்த பொறுப்பு டெல்லியின் தமிழக இல்லத்தில் இருக்கும் முதன்மை உள்ளுரை ஆணையர்களில் ஒருவரான முருகானந்தம்.ஐஏஎஸ் செய்து வருகிறார். அவரது இறுதி சடங்குகள் செய்யப்படும் நேரம் குறித்து இன்னும் முடிவாகவில்லை எனத் தெரிகிறது.
அரசியல்வாதிகள் ஆறுதல்
முத்துக்கிருஷ்ணன் மறைவை அடுத்து தந்தை ஜீவானந்தத்தை சந்தித்து தமிழக அரசியல் தலைவர்கள் நேற்று நேரில் வந்து ஆறுதல் கூறினர். இதற்காக அவர்கள், முத்து கிருஷ்ணன் உடல் வைக்கப்பட்டிருக்கும் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தனர். காங்கிரஸ் கட்சியில் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, அதிமுகவின் மக்களவைவின் உறுப்பினர்களான முத்துகருப்பன், கே.காமராஜ் மற்றும் எஸ்.ஆர்.விஜயகுமார், திமுகவில் அதன் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேரில் வந்து ஜீவானந்தமிடம் ஆறுதல் கூறினர்.
நிர்மலா சீதாராமன் ஆறுதல்
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர், முத்துக்கிருஷ்ணனின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.