

டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின், மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 60 லட்சம் இளைஞர்களுக்கு புதிதாக திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அதிகாரப் பூர்வமற்ற இதர பயிற்சி பெற்று தகுதியான 40 லட்சம் பேருக்கு சான்றிதழ் வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
பயிற்சியாளர்களுக்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்ற செலவினங்களை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். மற்றபடி, பயிற்சிக் கட்டணம், பணி நியமனம் தொடர்பான செலவினங் கள் போன்றவை, நேரடி பணப் பட்டுவாடா திட்டத்தின் கீழ், பயிற்சி யாளரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் போன்ற வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வடிவமைக்கப்படும்.
வரும் 2020-ம் ஆண்டுக்குள் அடுத்த 4 ஆண்டுகளில், ஒரு கோடி பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி கள் வழங்குவதற்கு, ரூ.12 ஆயிரம் கோடி செலவாகும் என கணக் கிடப்பட்டது. பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் (2016-20) திட்டத்துக்காக இத்தொகையை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.