Last Updated : 05 Jun, 2017 06:41 PM

 

Published : 05 Jun 2017 06:41 PM
Last Updated : 05 Jun 2017 06:41 PM

சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி-மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

அதிநவீன ஜிசாட்-19 தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவரும் பிரதமரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 4 டன் வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை ரூ.300 கோடி செலவில் தயாரித்துள்ளது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ராக்கெட், ஜிசாட்-19 எனப்படும் அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் தனது முதல் பயணத்தை நேற்று வெற்றிகரமாக தொடங்கியது.

ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்படுவதற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் (ஜூன் 4) பிற்பகல் 3.58 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். திட்டமிட்டபடி நேற்று மாலை 5.28 மணிக்கு ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்ணில் செல்லும்போது ராக்கெட் 3 கட்டங்களாக பிரிந்து புறப்பட்ட 16.20 நிமிடத்தில் ஜிசாட்-19 செயற்கைக்கோளை அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. அப்போது, இஸ்ரோ மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் கைதட்டியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவியும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

இந்த வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இனி வருங்காலங்களில் 4 டன் வரை அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத் துவதற்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இஸ்ரோவுக்கு ஏற்படும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு மிச்சமாகும். மேலும், வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக நம்முடைய ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்தி வருவாயும் ஈட்ட முடியும்.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வந்தன. இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

2 மடங்கு திறன்

இஸ்ரோ தயாரித்துள்ள ராக்கெட்களில் அதிக எடை கொண்ட ராக்கெட் ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1. இது 640 டன் எடையும் 43.43 மீட்டர் நீளமும் 5 மீட்டர் விட்டமும் கொண்டது. சி-25 எனப்படும் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது முந்தைய ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட்டைவிட இரண்டு மடங்கு அதிக திறன் கொண்டது. மேலும், ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்களுள் அதிக திறன் படைத்தது.

இந்த ராக்கெட் மூலம் 4 டன் வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவிநிலை சுற்றுவட்டப் பாதையிலும் (Geosynchronous Transfer Orbit). 10 டன் வரை எடை எடை கொண்ட செயற்கைக்கோள்களை பூமியின் தாழ்வட்ட பாதையிலும் (Low Earth Orbit) நிலை நிறுத்தலாம். அதிக எடை காரணமாக இந்த ராக்கெட்டுக்கு ‘குண்டு பையன்’, ‘பாகுபலி ராக்கெட்’ போன்ற பெயர்களை இந்திய ஊடகங்கள் சூட்டியுள்ளன.

ஜிசாட்-19

அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-19 மொத்தம் 3,136 கிலோ எடை கொண்டது. இதில் 4,500 வாட்ஸ் திறனுடைய சோலார் பேனல்,2.0 மற்றும் 1.4 மீட்டர் நீளம் கொண்ட 2 ஆன்டெனாக்கள், மற்றும் க்யூ பேண்ட் தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள் தனது சுற்றுவட்டப் பாதையில் பூமியிலிருந்து 170 கி.மீ. அருகாமையிலும் 35,975 கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இந்த ஒற்றை செயற்கைக்கோள், தற்போது பயன் பாட்டில் உள்ள 6 அல்லது 7 தகவல்தொடர்பு செயற்கைக் கோள்களின் ஒட்டுமொத்த திறனுக்கு இணையானது. இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவில் இணையதள வேகம் 4 கிகா பைட்ஸ் அளவுக்கு அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x