Published : 16 Dec 2013 08:10 PM
Last Updated : 16 Dec 2013 08:10 PM

டெல்லி கற்பழிப்பு வழக்கு: முதல் தகவல் அறிக்கை முறையற்றது என வக்கீல் வாதம்

டெல்லி கற்பழிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களில் இருவர், போலீஸ் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை முறையற்றது என வாதாடியுள்ளனர்.

சென்ற வருடம் நாட்டையே உலுக்கிய டெல்லி கற்பழிப்பு வழக்கில், சம்பந்தபட்ட நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து, அவர்களது தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

நீதிபதிகள் ரேவா கேத்ராபால் மற்றும் ப்ரதீபா ராணி ஆகியோர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகளில், முகேஷ் மற்றும் பவன் குமாருக்காக வக்கீல் சர்மா வாதாடினார். சம்பவத்திற்கு ஒரே சாட்சியாக இருந்த அந்த பெண்ணின் ஆண் நண்பர் கூறிய தவறான தகவல்களின் அடிப்படையில் போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் அந்தப் பெண் இந்த இருவருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கவில்லை, அவர் மருத்துவமனையில் அளித்த வாக்குமூலத்திற்கான வீடியோ ஆதாரம் எதுவும் இல்லை. அந்தப் பெண்ணின் புகாரை ஏன் பதிவு செய்யவில்லை என போலீஸ் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே அந்த முதல் தகவல் பொய்யானது என வாதாடினார்.

மருத்துவ ஆதாரங்களைப் பற்றி சந்தேகம் எழுப்பிய சர்மா, கர்னாடகாவைச் சேர்ந்த ஆய்வுக்கூடம் அளித்துள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த பற் கடி அடையாளங்கள் ஆறில், இரண்டு மட்டுமே மற்ற இரண்டு குற்றவாளிகளோடு பொருந்தியுள்ளது. வேறு நான்கு பேரை காப்பாற்ற, போலீஸ் இந்த வழக்கை ஜோடித்துள்ளதாக சர்மா தெரிவித்தார்.

அவரது வாதம் செவ்வாய்கிழமை (நாளை) தொடரும் எனத் தெரிகிறது.

முன்னதாக, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என 6 பேரை போலீஸ் கைது செய்தது. அதில் ஒரு மைனரும் அடக்கம். சில நாட்களிலேயே, முக்கிய குற்றவாளி ராம் சிங், திஹார் சிறையில் அவரது கூடத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதனால் அவருக்கு எதிரான வழக்குகள் கைவிடப்பட்டன. மைனர் குற்றவாளிக்கு சிறார் நீதிமன்றம் 3 வருட சிறைத் தண்டனை அளித்தது. மீதமிருந்த அக்‌ஷய், வினய், பவன் குப்தா மற்றும் முகேஷுக்கு செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதே உயர்நீதிமன்றம் அதை உறுதி செய்ய வேண்டும் என்று விரைவு நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டதால் அதன் விசாரணை இன்று நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x