

உ.பி.யில் அமையவிருக்கும் பாஜக அமைச்சரவையில் ஹஜ் துறை யாருக்கு அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அக்கட்சி மற்றும் கூட்டணியிலும் ஒரு முஸ்லீம் கூட எம்எல்ஏவாக இல்லை என்பது காரணம் ஆகும்.
உ.பி.யின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதன் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் அக்கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரையும் போட்டியிட வைக்கவில்லை. இதன் கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் போட்டியிட்ட 11 மற்றும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் 8 தொகுதியிலும் கூட எந்த முஸ்லீமும் நிறுத்தப்படவில்லை. இதனால், பாஜக கூட்டணிக்கு கிடைத்த 312 எம் எல் ஏக்களில் ஒருவர் கூட முஸ்லீம்கள் இன்றி போய்விட்டனர். அடுத்த சில நாட்களில் உ.பி. யில் அமையவிருக்கும் பாஜக அமைச்சரவையில் ஹஜ் துறையும் இடம் பெற்றுள்ளது.
இந்த துறையின் மூலம் ஒவ்வொரு வருடமும் சுமார் 30,000 முஸ்லீம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சவுதி அரேபியாவின் புனித ஹஜ் யாத்திரைக்கு அனுப்பப்படுவது வழக்கம். அகிலேஷ் அமைச்சரவையில் ஆசம்கானின் இத்துறையின் அமைச்சராக இருந்தார். இதற்கு முன்பும் பல ஆண்டுகளாக அத்துறையின் அமைச்சராக ஒரு முஸ்லீம் எம்எல்ஏ அதில் அமர்த்தப்பட்டிருந்தார். தற்போது பாஜகவிடம் முஸ்லீம் இல்லாமையால் அதில் அமர்த்தப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து உ.பி. மாநில பாஜக நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘ஹஜ் துறையில் அமைச்சராக முஸ்லீம்கள் எங்களிடம் இல்லாதது ஒரு சிறிய நெருடல் தான். அந்த பதவியில் ராம்பூரின் தொகுதியில் வெற்றி பெற்ற சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த பல்தேவ்சிங் ஓலக் அமர்த்த வாய்ப்புகள் உள்ளன. இவர், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நன்வீக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படி இல்லை எனில், மேல்சபைக்கு ஒரு முஸ்லீம் தேர்ந்தெடுத்த பின் அவரை அமர்த்தவும் வாய்ப்புகள் உள்ளன’ எனத் தெரிவித்தனர்.
உபியில் 2011-ன் அரசு புள்ளிவிவரப்படி முஸ்லீம்கள் 19.5 சதவிகிதம் உள்ளனர். இதனால், அவர்களை முக்கிய வாக்கு வங்கியாக எண்ணி பாஜக தவிர அனைத்து கட்சிகளும் முஸ்லீம் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட வைத்தனர். மிக அதிகமாக பகுஜன் சமாஜில் 105 போட்டியிட்டு ஆறு பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சமாஜ்வாதியின் 62–ல் 19 முஸ்லீம்கள் மட்டுமே வென்றுள்ளனர்.
காங்கிரஸில் இரண்டும், 30 முஸ்லீம்களுக்கு வாய்ப்பளித்த அஜீத்சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. உபியின் மேற்கு பகுதியிலுள்ள 143 தொகுதிகளில் 60 சதவிகிதம் முஸ்லீம்கள் உள்ளனர். இதன் ராம்பூர் மாவட்டத்தில் மிக அதிகமாக 60 சதவிகிதம் உள்ளனர். ஆனால், கடந்த 2012 தேர்தலில் 69 என இருந்த முஸ்லீம் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்து வெறும் 27 என்றாகி உள்ளது. இதேபோல், உபியின் 80 மக்களவை தொகுதியிலும் 2014-ன் தேர்தலில் ஒரு முஸ்லீம் எம்பிக்களும் இல்லை.