

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் கிராம மக்கள் இருவர் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், பூஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர்.
இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: "பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை இரவு, இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், எல்லையோர கிராமத்தில் இருந்து வீடுகள் சில சேதமடைந்தன. கிராமவாசிகள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்" என்றார்.
கடந்த 4 நாட்களில், எல்லையில் 7-வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.