

கூகுள் தேடியந்திர தளத்தின் புகைப்படப் பிரிவில் 'டாப் 10 குற்றவாளிகள்' (Top 10 criminals) என்று ஆங்கிலத்தில் தேடினால் கொட்டிக் கிடக்கும் படங்களில் முதன்மையாக இருப்பவை அதிர்ச்சிக்கு உரியவை.
அந்தத் தேடல் முடிவின் இரண்டாவது படம் மட்டுமல்ல... முதல் 20 நபர்களின் படங்களில் மூன்றில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த கூகுள் தேடல் முடிவுகளையொட்டி, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் சிலர் பதிவுகள் இடத் தொடங்கினர். இதன் விளைவாக, #Top10Criminals என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. கூகுளில் டாப் 10 கிரிமினல்கள் என்ற தேடலுக்கான முடிவில் மோடியின் முதன்மை வகிப்பது விவாதப் பொருள் ஆனது.
இது நெட்டிசன்கள் பலரையும் கவனத்தில் ஈர்க்க, #Top10Criminals ஹேஷ்டேக் புதன்கிழமை காலையிலேயே இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் முதன்மை இடத்தையும் பிடித்தது.
அல் காபோன், ஒசாமா பின்லேடன், தாவுத் இப்ராஹீம், ஹசீஃப் சையத், ஜாக்குவின் குஸ்மான், ஜார்ஜ் புஷ் உள்ளிட்டோரது படங்களின் பட்டியலுடன் மோடி காட்சியளிப்பதை ஸ்க்ரீன் ஷாட் ஆக எடுத்து, ட்விட்டரில் பதிவுகள் கொட்டப்பட்டன.
இந்தத் தேடல் முடிவுகளையொட்டி, மோடியை கிண்டல் செய்தும் கலாய்த்தும் குறும்பதிவுகள் ஏராளம் என்றால், அதற்கு இணையாக அவருக்கு ஆதரவு பதிவுகளும் இடப்பட்டன. கூகுள் தேடலில் கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் இத்தகைய அதிர்ச்சிப் போக்கு நிலவுவதாக பெரும்பாலானோரும் தங்கள் கவலையைப் பதிவு செய்தனர்.
அதேவேளையில், தேடல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை சர்ச்சைக்கு உள்ளாகி, அது ட்விட்டரில் ஆயிரக்கானோரால் விவாதிக்கப்பட்டது, கூகுள் நிறுவனத்துக்கே நெருடலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
கூகுள் தேடலில் பொறுத்தவரையில், இதுவரையிலான பதியப்பட்ட படங்கள், செய்திகள், கட்டுரைகள் முதலானவற்றில் இடப்பட்ட குறிச்சொற்கள் எனப்படும் கீ-வேர்டுகள், டேக்-குகளின் அடிப்படையில் தேடல் முடிவுகள் காட்டப்படுகின்றன.
அத்துடன், ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளை இணைத்துத் தேடப்படுவதன் எண்ணிக்கையின் அடிப்படையிலும் முடிவுகள் இறுதியாகின்றன. இதனால், சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணானதும் நெருடலானதுமான முடிவுகள் வருவதைக் கட்டுப்படுத்துவது என்பது அரிதான நடவடிக்கை என்று இணைய தொழில்நுட்ப ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
ட்விட்டரில் #Top10Criminals ஹேஷ்டேகில் கொட்டப்பட்ட பதிவுகளில் மிகச் சில:
Sanjay Jha @JhaSanjay - இந்த அளவுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. இப்படி வருவது சரியானது தான். மோடி மீதான வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பு வந்துவிட்டதே. பின்னர் இதுகுறித்து பேச வேண்டிய அவசியமில்லை.
Roji M John@rojimjohn - குற்றவாளிகள் பட்டியலில் முதன்மை இடத்தில் நமது நாட்டின் பிரதமர் உள்ளார். பிரதமரும் கூகுளும் தங்களை இனியாவது திருத்திக் கொள்ளட்டும்.
हम भारत के लोग @India_Policy - கூகுள் அல்காரிதமை பயனாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைதான் இந்த ஹேஷ்டேக் காட்டுகிறது.
Sir Chetan Bhagat @chetan_bhaqat - ரூ.780 கோடி விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. ஒருவேளை இதுவும் கூகுள் விளம்பர உத்தியாக இருக்கலாம்.
Swapnil Sinha @sswapss - இந்தியாவை தூற்றும் செயல் இது. மோடிக்கு எதிரானவர்கள் இதனை பயன்படுத்துவது தவறு.
Parikshit Shah @imparixit - நரேந்திர மோடியின் பின்னணி நம் அனைவருக்குமே தெரியும். அவரை நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்தான் நமது பிரதமர். அவரை விட்டுக் கொடுக்க முடியாது.