

கடைகள், மால்கள், திரையரங்குகள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் விடுமுறையின்றி இயங்கு வதற்கான மாதிரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
சில்லறை வர்த்தகத்தை ஊக்கப் படுத்தவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் சிறு, குறு கடைகள், மால்கள், திரையரங்குகள் மற்றும் பிற நிறுவனங்கள் ஆண்டு முழு வதும் 24 மணி நேரமும் விடுமுறை யின்றி இயங்குவதற்கு மாதிரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் மசோதா 2016 கொண்டு வரப்படும் என மத்திய பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரி வித்திருந்தார்.
அதன்படி இதற்கான மாதிரி சட்டம் வரையறுக்கப்பட்டது. அதில் உற்பத்தி துறை அல்லாத 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட நிறுவனங்கள் 365 நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு பணிகளில் பெண்கள் பணியமர்த் தப்பட்டால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். குடிநீர், கேன்டீன், முதலுதவி, கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற அறிவுரைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத் தில் இந்த மாதிரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் மசோதா 2016-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மாதிரி சட்டம் என்பதால் நாடாளுமன்றத் தின் அனுமதி இதற்கு தேவை யில்லை என கூறப்படுகிறது. இந்த சட்டத்தை மாநில அரசுகள் விரும்பினால் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் அல்லது திருத்தம் செய்து அமல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.