

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமருக்கு தொடர்புள்ளதாக, முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் கூறியிந்தது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொடர்புள்ளதாக, நிலக்கரித் துறையின் முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் கூறியிருந்தார். இதையடுத்து பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பற்றி பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறும்போது, “பொதுத் துறை நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரிலேயே நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள குழுதான் இந்த ஒதுக்கீடுகளைச் செய்தது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மறைப்பதற்கு ஏதும் இல்லை. நாங்கள் வெளிப்படையாக செயல்பட்டுள்ளோம்” என்றார்.
எனினும், பி.சி.பரேக்கின் குற்றச்சாட்டு தொடர்பாக நாராயணசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார். “இந்த விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. எனவே, இதற்கு மேல் கருத்து ஏதும் கூற நான் விரும்பவில்லை” என்றார் நாராயணசாமி.