

புதுடெல்லி மாநகராட்சி (என்டிஎம்சி) அதிகாரி கொலை வழக்கில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் பதவியை பறித்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வந்த எம்.எம்.கான், கடந்த மே 16-ம் தேதி, அவரது வீட்டுக்கு வெளியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். வழக்கு ஒன்றை ஹோட்டல் உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பதற்கு, கான் லஞ்சம் வாங்க மறுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் ராகவ் சதா, செய்தியாளர்களிடம் கூறும்போது, “எம்.எம்.கான் கொலை வழக்கில் வெளிவரும் உண்மைகள், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், பாஜக எம்.பி. மகேஷ் கிரி, பாஜக முன்னாள் எம்.பி. கன்வார் சிங் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துகிறது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட வேண்டும்.
நடந்த முழு சம்பவம் குறித்தும் பாகுபாடற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். நஜீப் ஜங்கிடம் அறிக்கை அளிப்பதை டெல்லி காவல்துறை உடனே நிறுத்த வேண்டும். அவர் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் வரை, இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை. நஜீப் ஜங் உடனே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அல்லது மத்திய அரசு அவரை பதவி நீக்க வேண்டும். நஜீப் ஜங்கை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தவேண்டும்” என்றார்.
எம்.எம்.கான் கொலை வழக்கில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று பாஜக எம்.பி. மகேஷ்கிரி, முன்னாள் எம்.பி. தன்வார் ஆகியோர் மறுத்து வருகின்றனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி எழுப்புவதாக அவர் புகார் தெரிவிக்கின்றனர்.