மங்கள்யான் ஏவுவதற்கான கவுன்டவுன் தொடங்கியது

மங்கள்யான் ஏவுவதற்கான கவுன்டவுன் தொடங்கியது
Updated on
1 min read

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் 'மங்கள்யான்' விண்கலத்துடன் பிஎஸ்எல்வி சி-25 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்டவுன் தொடங்கியது.

மங்கள்யான் ஏவுவதற்கான 56 மணி நேரம் 30 நிமிடம் கவுன்டவுன் இன்று காலை 6.08 மணிக்கு திட்டமிட்டபடி தொடங்கியதாக இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குத் தன் சொந்த முயற்சியில் மங்கள்யான் செயற்கைக் கோளை ஏவுகிறது இந்தியா.

நவம்பர் 5 ஆம் தேதி, பிற்பகல் 2.36 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து மங்கள்யானைச் சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி புறப்படுகிறது.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், தனது சொந்த முயற்சியில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்கு செயற்கைக்கோளை அனுப்பிய 2 ஆவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். இது இந்தியாவின் நீண்டகாலக் கனவு.

2012 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங், செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை ஏவும் இந்தியாவின் முயற்சி 2013-இல் நனவாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். "அறிவியல் தொழில்நுட்பத்தில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும்" என்றார் அவர்.

இந்தத் திட்டத்தை மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் என இஸ்ரோ குறிப்பிடுகிறது. ரூ.450 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் 500 விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 1,350 கிலோ எடையுடைய மங்கள்யான், ஏவப்பட்ட பின் 25 நாள்கள் புவிசுற்றுப்பாதையில் இருந்தபடி, செவ்வாய் நோக்கிய பயணத்துக்கான எரிசக்தியைச் சேமித்த பிறகு, நவம்பர் 30 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கி, 9 மாதங்களுக்குப் பின் செவ்வாய் சுற்றுப்பாதையை அடையும்.

மங்கள்யான் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கப்போவதில்லை. அதன் சுற்றுப்பாதையில் மிதந்தபடி இதுவரை அறியப்படாத செவ்வாய் கிரகத் தகவல்களைச் சேகரிக்கும். 15 கிலோ எடையுள்ள மங்கள்யான், லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்களைக் கொண்டிருக்கிறது.

அதில் ஒன்று மீத்தேன் வாயுவைக் கண்டறியும். மற்றொன்று ஹைட்ரஜன் மூலம் செவ்வாயின் மேல்மண்டல வெளியேற்ற முறைகளை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்திலுள்ள தாது வளத்தை தெர்மல் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆய்வு செய்யும்.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிவதுதான் மங்கள்யானின் முக்கிய நோக்கமாக இருக்கும். ஏனெனில் கரியமில வாயு சார்ந்த மீத்தேனின் இருப்பு, உயிரின இருப்புக்கான ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in