

பண மெத்தையில் படுத்துப் புரண்டு தனது கனவை நனவாக்கிக் கொண்ட திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் தலைவர் சமர் ஆசார்ஜி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அரசு காண்ட்ராக்டராக உள்ளவர் சமர் ஆசார்ஜி. என்றைக்காவது ஒரு நாள் பணத்தையே மெத்தையாக்கி அதில் படுத்து புரள்வது என்பது இவரது நீண்டகால ஆசையாம். அதை நனவாக்கிட அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணம் உதவியது. வங்கியிலிருந்து பணம் கொண்டுவந்து அதை மெத்தையில் பரப்பி அவர் படுத்து உருள்வது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
'நான் 20 லட்சம் வங்கியிலிருந்து கொண்டுவந்து அதை மெத்தையில் பரப்பி, பண மெத்தையில் படுத்து புரள்வது என்கிற எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்' என அவர் கூறுவது தொலைக்காட்சியில் வியாழக்கிழமை வெளியானது. அவர் அதோடு விடாமல், 'நிறைய பணத்தை வீட்டில் சேர்த்துக்கொண்டு, தங்களைப் பாட்டாளிகள் என கூறி பஞ்சப்பாட்டு பாடும் கட்சியின் மற்ற உறுப்பினர்களை போல கபடக்காரன் அல்ல நான்' என்றும் அவர் கூறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இது கட்சிக்கே அவப் பெயர் என்று பிடிஐ நிருபரிடம் சனிக்கிழமை தெரிவித்தார் திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் செயலர் பிஜன்தர். பண மெத்தையில் படுத்து புரளும்போது தனது கையாலே மொபைல் போனில் படம் எடுத்து பதிவு செய்துகொண்டுள்ளார் ஆசார்ஜி. அந்த படத்தை அவரது நண்பர் ஒருவர்தான் தொலைக்காட்சி சேனலுக்கு ரகசியமாக கொடுத்தது கட்சி அளவில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்சியின் அகர்தலா மண்டல பிரிவு இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்துள்ளது. கட்சிக் கூட்டத்தில் இது பற்றி விவாதித்து ஆசார்ஜி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கையை பரிந்துரைக்கும். ஆசார்ஜியின் இந்த அநாகரிக செயலை கட்சி ஒரு போதும் ஏற்காது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தர்.
இந்த நிலையில், அவரை கட்டியில் இருந்து நீக்கியதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது.
காங்கிரஸ் தாக்கு
இதனிடையே, மாநில ஆளும் கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் அசையும் அசையா சொத்துகள் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸின் மூத்த உறுப்பினர் ரத்தன் லால் நாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளும் கட்சியில் ஊழல் புரையோடியுள்ளதை யும் ஆளும் கட்சித் தலைவர்கள் அரசு பணத்தில் முறைகேடு செய்து சம்பாதித்திருப்பதையே பண மெத்தையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் படுத்து உருண்டு புரண்டது அம்பலப்படுத்துகிறது என்றார் ரத்தன் லால் நாத்.