

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தன்னை ஊடகங்களின் ஆய்வுக்கு உள்படுத்த தயாரா என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராஜ்மோகன் காந்தி டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தன்னை எதிர்த்துப் போட்டியிட யாருமே இல்லை என்று மோடி கருதுகிறார். வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட அர்விந்த் கேஜ்ரிவால்தான் மிக பொருத்தமான நபர்.
நரேந்திர மோடி நிருபர்களை நேரடியாக சந்திப்பது இல்லை. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில்களோடு மட்டுமே நிருபர்களை சந்திப்பார். இப்போது மோடியிடம் அர்விந்த் கேஜ்ரிவால் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால் அந்த கேள்விகளுக்கு மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை.
தனி விமானத்தில் நாடு முழுவதும் அவர் பயணம் செய்து பிரசாரம் செய்கிறார். ஆடம்பரமான மேடைகளில் பேசுகிறார். அதில் தவறு இல்லை. ஆனால் அதற்கான செலவை யார் ஏற்றுக் கொள்கிறார் என்பதை மோடி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். குஜராத்தில் ஊழலைக் கட்டுப்படுத்த அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது சாதனைகள் என்று தவறான புள்ளிவிவரங்கள் வெளி யிடப்படுகின்றன.
குஜராத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தேர்தல் செலவுகள் குறித்தும் ஊடகங்களின் ஆய்வுக்கு மோடி தன்னை உள்படுத்த தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி அண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் அவர் கிழக்கு டெல்லி பகுதியில் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கிழக்கு டெல்லி மக்கள் குடிநீருக்காக மாதம் ரூ.2000 செலவு செய்கிறார்கள். மாநகராட்சி நிர்வாகம் பாஜக கையில் உள்ளது. டெல்லி ஆட்சி நிர்வாகம் மத்திய அரசு கையில் உள்ளது. ஆனால் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளாலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குடிநீர் பிரச்சி னைக்குத் தீர்வு காணப்படும் என்றார்.