

போலீஸ் அதிகாரிக்கு வழங்கப் பட்ட வீரதீர செயல்களுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்மீத் சிங், காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இவருக்கு கடந்த 1997-ம் ஆண்டு வீரதீர செயல் புரிந்ததற்காக மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டது.
அதன்பின்னர், அவர் மீது கடந்த 2001-ம் ஆண்டு தொடரப்பட்ட கொலை வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு நீதி மன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. மேலும் குர்மீத் சிங்குக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் பணியில் இருந்தும் அவர் உடனடியாக நீக்கப்பட்டார்.
இந்தத் தகவல் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம்தான் தெரியவந்தது. இதையடுத்து, குர்மீத் சிங்குக்கு வழங்கப்பட்ட வீரதீர செயல்களுக்கான குடியரசுத் தலைவர் விருதைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.
பஞ்சாப் மாநில அரசும் குர்மீத் தொடர்பான தகவலை உறுதி செய்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் காவலர்களுக்கான வீரதீர விருதைத் திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவருக்கு ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்தது.
இதனைப் பரிசீலித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த ஜூன் 7-ம் தேதி குர்மீத் சிங்குக்கு வழங்கப்பட்ட விருதைத் திரும்பப் பெற உத்தரவிட்டார்.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில், வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்படுபவர்கள் அல்லது காவலர்களுக்கான ஒழுக்க நெறிகளைத் தவறுபவர்கள் அல்லது குற்றம்புரிந்து பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீரதீர செயல்களுக்கான விருது திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.