

சுரங்க முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஆனந்த் சிங் வியாழக்கிழமை அதிகாலை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் விஜயநகர் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆனந்த் சிங், கடந்த பா.ஜ.க. ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தார். இவர் பெல்லாரி ரெட்டி சகோதரர்களை போல கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், முன்னாள் பா.ஜ.க.அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்க முறைகேடு வழக்கில் கைதானார். அப்போதே ஆனந்த் சிங் பெயரும் அடிபட்டது. அப்போது தலைதப்பிய ஆனந்த் சிங் வியாழக்கிழமை கைதாகியுள்ளார்.
சுரங்க முறைகேடு புகார்
2010-ம் ஆண்டு கார்வார் மாவட்டம் பெலகேரி துறைமுகத்தில் கர்நாடக மாநில லோக் ஆயுக்தா போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த 7.74 லட்சம் டன் கனிம தாதுக்களை பறிமுதல் செய்தனர். இவையனைத்தும் ஆனந்த் சிங்கின் 'வைஷ்ணவி மினரல்ஸ்' என்ற சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.
2 மாதங்கள் கழித்து பறிமுதல் செய்யப்பட்ட கனிம தாதுக்களை சோதனை செய்ய பெங்களூரிலிருந்து லோக் ஆயுக்தா போலீஸ் உயர் அதிகாரிகள் பெலகேரி துறைமுகத்திற்கு சென்றனர். அப்போது 5 லட்சம் டன் கனிம தாதுக்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
இந்த வழக்கை கர்நாடக அரசு லோக் ஆயுக்தா போலீசாரிடமிருந்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.
சிபிஐ விசாரனையில், ஆனந்த் சிங் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்களும் 120 அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் ஆனந்த் சிங்கை தவிர்த்து குற்றம்சாட்டப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி
செப்டம்பர் 20-ம் தேதியிலிருந்து தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ஆனந்த் சிங்கை சரணடையுமாறு பெங்களூர் சிபிஐ நீதிமன்றம் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் சம்மன் அனுப்பியது. அதனால் அக்டோபர் 7-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆனந்த் சிங் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அம்மனுவை சிபிஐ நீதிமன்ற நீதிபதி சோமராஜூ தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆனந்த் சிங்கை கைது செய்ய சிபிஐ போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை பெங்களூர் விமானநிலையத்தில் ஆனந்த் சிங்கை சிபிஐ போலீசார் கைது செய்தனர். சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்திலிருந்து ஆனந்த் சிங் இறங்கிய போது, சுங்க துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் கைது செய்யப்பட்டதாக சிபிஐ போலீசார் தெரிவித்தனர்.
சுரங்க முறைகேடு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆனந்த் சிங்கை சிபிஐ போலீசார் பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி சோமராஜூ முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சிபிஐ தரப்பில் 15 நாட்கள் ஆனந்த் சிங்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். அதனை ஏற்க மறுத்த நீதிபதி 10 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இம்மாதம் 26-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆனந்த் சிங்கை மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.