

தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் பலாத்கார வழக்கில், கோவா போலீஸார் அனுப்பிய கேள்விப் பட்டியலுக்கு ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ இதுவரை பதில் அளிக்கவில்லை.
தேஜ்பால் மீது சக பெண் நிருபர் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இச் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்துக்கு சற்று முன், தேஜ்பாலுடன் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ இருந்துள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் கோவா குற்றப்பிரிவு போலீஸார், நீரோவுக்கு கேள்விப் பட்டியல் ஒன்றை இம்மாத தொடக்கத்தில் அனுப்பி வைத்து, இதற்கு பதில்அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். நீரோவின் வழக்கறிஞரிடம் தொடர்பு கொண்டு பேசிய பிறகே கேள்விப் பட்டியலை கோவா போலீஸார் அனுப்பினர்.
இந்நிலையில் கோவா காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறுகையில், “நீரோவின் பதிலுக்காக நாங்கள் தொடர்ந்து காத்திருக்கிறோம். இது தொடர்பாக நினைவூட்டல் கடிதமும் அனுப்பியிருக்கிறோம்” என்றார்.
இந்த நிலையில் தேஜ்பால் மீதான வழக்கில் இம்மாத இறுதியில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வழக்கில் தெஹல்கா இதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி, தேஜ்பாலின் மகள் உள்ளிட்ட பலரின் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி பதிவு செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தேஜ்பாலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் சடா கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.