

உத்தரபிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், முதல்முறையாக நாடாளு மன்ற பாஜக எம்பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது மோடி பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள இளைஞர்களை பாஜக தலைவர்கள் கவர்ந்திழுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் கூறும்போது, ‘‘டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்த ‘பீம் ஆப்’ பற்றிய விழிப்புணர்வை கிராம மக்களிடம் ஏற்படுத்தவும் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய கிராம மக்களுக்கு உதவும்படியும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்’’ என்றார்.
இதுகுறித்து அமித் ஷா கூறும் போது, ‘‘ஐந்து மாநில தேர்தல் முடிந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல்தான் பாஜக.வுக்கு உள்ள அடுத்த மிகப்பெரிய சவால். அதற்குத் தயாராகும்படி பாஜக தலைவர்களைக் கேட்டுக் கொண் டுள்ளோம்’’ என்றார். உத்தரபிரதேசத்தில் உள்ள தலித் வாக்காளர்கள் கணிசமான அளவில் பாஜக.வுக்கு வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஒரு வாரத் துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. அம்பேத்கரின் பணிகள், அவருடைய பங்களிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் ஒரு வார காலத்துக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டப் பணிகள், சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துரைக்க இளைஞர்களைத் தூதுவர்களாக நியமிக்க வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், செய்தித் தாள்கள், தொலைக்காட்சியை விட இன்றைய இளைஞர்கள் தகவல் அறிந்து கொள்ள மொபைல் போனை மிகவும் சார்ந்திருக்கின்றனர். எனவே, இளைஞர்களை தொடர்பு கொள்ள மொபைல் போனை பாஜக தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் இளைஞர்கள் பிளஸ் 2 படிக்கும் போதே பாஜக தலைவர்கள் அவர் களைத் தொடர்பு கொள்ள வேண் டும் என்று மோடி கூறியுள்ளார்.
ஏப்ரல் 6-ம் தேதி பாஜக நிறுவன நாள். அன்று முதல் ஒரு வார காலத்துக்கு ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பல்வேறு நிகழ்ச்சி களை நடத்த பாஜக தலைவர் களை அமித் ஷா கேட்டுக் கொண் டுள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை பாஜக தலைவர்கள் முன்னெடுத்துச் செல்லவும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.