Published : 27 Oct 2014 12:30 PM
Last Updated : 27 Oct 2014 12:30 PM

நவ. 24-ல் குளிர்கால கூட்டத்தொடர்: மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை

வரும் நவம்பர் 24 முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்துவது குறித்து, நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாடாளுமன்ற விவகாரங் களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் அனந்த்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் சந்தோஷ் கங்வார் பங்கேற்றனர்.

வரும் நவம்பர் 24-ல் தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை குளிர் காலக் கூட்டத் தொடர் நடத்துவது என இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 22 அமர்வுகளு டனான இந்தக் கூட்டத்தொடரின் நான்கு அமர்வுகள் தனிநபர் விவகாரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கும்படி மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜனுக்கு குடியரசுத் தலைவர் அறிவுறுத்துவார். அதன் பிறகு முறைப்படி இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

நிலுவையில் உள்ள மசோதாக்கள்

இதுவரை நடந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் 59 மற்றும் மக்களவை யில் 8 என மொத்தம் 67 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதில் சுமார் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. மேலும், நான்கு அவசர சட்டங்களும் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x