Last Updated : 02 Nov, 2016 09:11 PM

 

Published : 02 Nov 2016 09:11 PM
Last Updated : 02 Nov 2016 09:11 PM

இந்திய மக்களை திட்டமிட்டு குறிவைக்கிறது பாகிஸ்தான்: எல்லை பாதுகாப்பு படை குற்றச்சாட்டு

பாகிஸ்தான் ராணுவம் தரும் ஒத்துழைப்புடன் அந்நாட்டு எல்லை காவல் படைகள் இந்தியாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது திட்டமிட்டு பீரங்கி தாக்குதல் நடத்துகின்றன என்று பிஎஸ்எப் (எல்லை பாதுகாப்பு படை) ஐ.ஜி. டி.கே.உபாத்யாய கூறினார்.

இது தொடர்பாக அவர் ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாகிஸ்தான் எல்லை காவல் படை வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் முழு ஒத்துழைப்பு தருகிறது. கடந்த சில காலமாக பாகிஸ்தான் எல்லை காவல் படையினர் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி எண்ணற்ற அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பீரங்கி குண்டுகளை திட்டமிட்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வீசி வருகின்றனர். பாகிஸ்தான் பகுதியில் வசிக்கும் மக்கள் மீது இந்தியா ஒருபோதும் தாக்குதல் நடத்தியதில்லை. பாகிஸ்தான் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் இடங்கள் மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்துகிறது. பாகிஸ்தான் படையினரின் 14 பதுங்குமிடங்களை பிஎஸ்எப் முற்றிலும் நாசம் செய்துள்ளது.

இந்தியாவின் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் மக்கள் இறந்ததாக கூறப்படுமேயானால் அவர்கள் ராணுவ நிலைகளுக்கு மிக அருகில் வசிப்பவர்களாக இருக்கலாம்” என்றார்.

இந்த பேட்டியின்போது பாகிஸ்தான் படையினரின் பதுங்கு குழிகளை மட்டும் குறிவைத்து பிஎஸ்எப் தாக்குதல் நடத்தும் படங்களை அவர் காட்டினார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் டெல்லியில் பிஎஸ்எப் உயரதிகாரி ஒருவர் நேற்று வெளியிட்டார். பாகிஸ்தான் படைகளுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டதற்கு இதுவே ஆதாரம் என்றார் அவர்.

ஜம்மு பிராந்தியத்தில் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் 2 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் 14 ராணுவ சாவடிகள் அழிக்கப்பட்டன.

இதனிடையே ரஜவுரி மாவட்டம், பிம்பர் காலி பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்வதையடுத்து எல்லைப் பகுதியில் 400 பள்ளிகளை மூடும்படி ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு, சம்பா, கதுவா, ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் இருந்து பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கிராமங்களில் இருந்து சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இங்கு வசிக்கும் எஞ்சிய குடும்பங்களும் அச்சத்தில் உறைந்துள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தாக்குதல் நடத்தி அழித்த பிறகு, எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

தூதரக அதிகாரிகள் வெளியேறினர்

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் 6 அதிகாரிகள் இந்தியாவில் இருந்து வெளியேறினர்.

இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்ட மெகமூத் அக்தர் என்ற தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மேலும் 6 அதிகாரிகள் பாகிஸ்தான் நேற்று திரும்பினர்.

“எங்கள் அதிகாரிகளை இந்திய அரசு தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. எனவே அவர்களால் இங்கு தங்கி பணியாற்ற முடியவில்லை” என்று பாகிஸ்தான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x