

டெல்லி சட்டப்பேரவையில் 42 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பதால், ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று பேரவைத் தலைவர் எம்.எஸ். திர் தெரிவித்தார்.
துணை நிலை ஆளுநரின் அறிவுரையை மீறி, கடும் அமளிக்கு இடையே டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்ய முற்பட்டார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எனினும், கடும் அமளிக்கிடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அமளி நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், பேரவை மீண்டும் கூடியதும் இம்மசோதாவை தாக்கல் செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்.
அதைத் தொடர்ந்து, ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்வதற்காக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே வாக்களித்தனர். மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து, 42 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பதால், ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று டெல்லி பேரவைத் தலைவர் எம்.எஸ். திர் அறிவித்தார்.
ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியான பாஜகவும் ஆரம்பம் முதலே ஜன் லோக்பால் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஜன் லோக்பால் மசோதா விவகாரத்தில் எத்தகைய எல்லைக்கும் செல்லத் தயார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என சபாநாயகருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
டெல்லி சட்டப்பேரவையில் நேற்று ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயன்றபோது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த ஜன் லோக்பால் மசோதாவைப் பொறுத்தவரையில், முதல்வர் பதவியை வகிப்பவர் முதல் 4-ம் பிரிவு ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் இந்தச் சட்டத்துக்கு உட்படுத்தப்படுவர். இதன்படி ஊழல் செய்பவர்களுக்கு அதிக பட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.