Last Updated : 25 Feb, 2017 09:20 AM

 

Published : 25 Feb 2017 09:20 AM
Last Updated : 25 Feb 2017 09:20 AM

வறுமையில் தவிக்கும் பூலான்தேவியின் குடும்பம்: தேர்தல் நேரத்திலும் கண்டுகொள்ளாத சமாஜ்வாதி கட்சியினர்

சம்பல் கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர், மறைந்த பூலான்தேவி. உ.பி.யில் வறுமையில் தவிக்கும் இவரது குடும்பத்தினரை தேர்தல் நேரத்திலும் சமாஜ்வாதி கட்சியினர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.

உ.பி.யின் ஜலோன் மாவட்டம், கால்பி பகுதியில் உள்ள பேமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பூலான் தேவி. இவர், இக்கிராமத்தின் உயர் சமூகத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டது உட்பட பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானதால் அதற்குப் பழி தீர்ப்பதற்காக துப் பாக்கி ஏந்தினார். அப்பகுதியை உள்ளடக்கிய சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் பிரபல கொள்ளைக்காரியாகவும் மாறி னார். தன்னைச் சித்திரவதை செய்த தாக்கூர் சமூகத்தினர் 22 பேரை பேமாய் கிராமத்தில் கடந்த 1981, பிப்ரவரி 14-ல் சுட்டுக்கொன்றார். இதன்பிறகு பிரபலமான பூலான்தேவியை ராஜஸ்தான், உ.பி., ம.பி. ஆகிய மூன்று மாநில போலீஸாரும் பிடிக்க முடியாமல் தவித்தனர்.

பிறகு சரணடைந்த பூலான் தேவியை முலாயம்சிங் யாதவ் தனது சமாஜ்வாதி கட்சியில் சேர்த்தார். மக்களவை தேர்தலில் உ.பி.யின் மிர்சாபூர் தொகுதியிலும் போட்டியிட வைத்தார். இங்கு 2 முறை எம்.பி.யாக இருந்த இவர் டெல்லியில் கடந்த 2001, ஜூலை 25-ம் தேதி தனது வீட்டு வாசலில் கொல்லப்பட்டார்.

இவ்வாறு முக்கிய தலைவர்கள் கொல்லப்படும்போது அவரது குடும்பத்தினரை அரசியலில் முன்னிறுத்துவது கட்சிகளின் வழக்கம். ஆனால் பூலான்தேவி கொல்லப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சி முற்றிலும் மறந்துவிட்டது.

பூலான்தேவியின் தாய் மல்லா தேவி. இவர் தற்போதும் தனது சொந்த கிராமமான ஷேக்புர் குடாவில் தனது கடைசி மகள் ராம்கலி தேவியுடன் வசித்து வருகிறார். 100 நாள் வேலைக்கு சென்றும் பலரது வீடுகளில் வேலை செய்தும் ராம்கலி தேவி வருவாய் ஈட்டுகிறார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ராம்கலி தேவி கூறும்போது, “எனது அக்காள் சம்பல் கொள்ளைக் காரியாகவும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யாகவும் இருந்த போது அரசியல்வாதிகளிடம் எங்களுக்கு கிடைத்த மரியாதை இப்போது இல்லை. எந்தக் கட்சியினரும் எங்களைக் கண்டு கொள்வதில்லை. கடந்த ஆண்டு எனது தாய் பட்டினிச்சாவில் இருந்து ஒரு பொதுநல சங்கத் தினரால் காப்பாற்றப்பட்டார். அக்கா உயிருடன் இருந்தபோது எனது சித்தப்பா பறித்துக்கொண்ட 8 ஏக்கர் நிலம் மீது நாங்கள் தொடர்ந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்குக்கு எங்களால் செலவு செய் யவும் முடியவில்லை” என்றார்.

பூலான்தேவியின் மூன்றாம் கணவரான உம்மேத் சிங்கை காங்கிரஸ் தங்கள் கட்சியில் சேர்த்து கடந்த 2007 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வைத்தது. பூலான்தேவியின் சகோதரியான முன்னி தேவி, உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் (தற்போது ராஜஸ்தான் ஆளுநர்) நடத்திவந்த ராஷ்டிரிய கிராந்தி தளம் சார்பில் போட்டியிட்டார். தேர்தலில் இருவரும் தோல்வி அடைந்தனர்.

எனினும், பூலான்தேவி கொல்லப்பட்ட பிறகு நிஷாத் அல்லது மல்லா என்கிற அவரது மீனவ சமூகத்தினர் அரசியல் அடையாளம் பெற முயன்று வரு கின்றனர்.

இதற்காக நிஷாத் விகாஸ் சங், ராஷ்ட்ரிய விகாஸ் ஏக்தா பரிஷத் என்ற பெயர்களில் அமைப்பு களை நிறுவி செயல்பட்டு வரு கின்றனர். சட்டப்பேரவைத் தேர்த லுக்கு முன் பூலான்தேவிக்கு உ.பி.யில் 11 சிலைகள் வைக்க இந்த அமைப்புகள் முயற்சி செய்தன. ஆனால் முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x