ஜன் லோக்பால் மசோதாவுக்கு டெல்லி அரசு ஒப்புதல்

ஜன் லோக்பால் மசோதாவுக்கு டெல்லி அரசு ஒப்புதல்
Updated on
1 min read

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவுக்கு, முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம், மாநிலத்தின் முதல்வரில் இருந்து அனைத்து நிலைகளிலும் இருக்கும் அரசாங்க ஊழியர்கள், ஊழல் குற்றாச்சாட்டு புரிந்தது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பும் வழங்கப்படும். அதேபோல, இந்த மசோதா நேர்மையான அதிகாரிகளுக்கும், ஊழல்களை அம்பலப்படுத்தவோருக்கும், சாட்சிகளுக்கும் பாதுகாப்பு கோரும் உரிமையைத் தருகிறது.

ஜன் லோக்பால் மசோதாவை நிறவேற்றுவோம் என்பதே ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மை வாக்குறுதியாக இருந்தது.

முதல்வராக இருந்தாலும், யாருக்கும் தனிச் சலுகை கொடுக்காமல் ஊழல் விசாரணைகள் நடத்தப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் சிசோத்யா கூறினார்.

எந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னும் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என சட்டப் பிரிவு தெரிவித்திருந்தாலும், இந்த மசோதாவை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

லோக்பால் அமைப்புக்கான தலைவர் தேர்வும், மற்ற உறுப்பினர்கள் தேர்வும் எந்த அரசியல் தலையீடும் இன்றி வெளிப்படையாக நடக்கும் என்றும், 7 நபர் கொண்ட லோக்பால் குழுவில் அரசின் சார்பாக முதலமைச்சர் இருப்பார் என்றும் சிசோத்யா கூறினார்.

"இது போல் ஒரு மசோதாவை உத்தரகண்ட் அரசாங்கம் ஏற்கனவே நிறவேற்றியிருந்தாலும், அதில் முதல்வர், அமைச்சர்களுக்கு எதிரான புகார்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. முதன் முறையாக ஊழலை அம்பலப்படுத்துபவர்களுக்கும், சாட்சிகளுக்கும் பாதுகாப்பு தருவதும் இந்த மசோதாதான்" என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in