

பாரதிய ஜனதா கட்சிக்குள் ஒற்றுமை நிலவுவதைக் காட்டும் விதமாக, அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியும், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் தோன்றினர்.
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இன்று (புதன்கிழமை) நடந்த பாஜக கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு, முதன்முறையாக அத்வானியும் மோடியும் சந்தித்துக் கொண்டது கவனத்துக்குரியது.
மேடையில் தனக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்த அத்வானியின் காலில் வணங்கினார் மோடி. அப்போது, மூத்த தலைவர் உமா பாரதி, க்ட்சியின் தலைவர் ராஜ்நாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
நரேந்திர மோடியை 'நரேந்திர பாய் மோடி' என்று அழைத்த அத்வானி, கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியைத் தேர்வு செய்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும், குஜராத்தின் மோடியின் ஆட்சியைப் பற்றி வெகுவாக பாராடினார்.
முன்னதாக, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது, அத்வானியின் அதிருப்தி காரணமாக கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.