

தெற்கு டெல்லியில் கிட்னி கடத்தல் கும்பல் ஒன்றை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேர்களில் இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் ஒருவரும் அடங்குவார்.
ஆனால், இந்த கிட்னி கடத்தல் கும்பலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளதோடு போலீஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.
அதாவது, “நோயாளிகளையும் மருத்துவமனையையும் ஏமாற்ற மிகத் துல்லியமாக செயல்பட்ட கடத்தல் கும்பலினால் பாதிகப்பட்டவர்கள் என்ற முறையில் போலீஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம்” என்று மருத்துவமனை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
அதாவது முதலில் கிட்னி தேவைப்படுவோரின் விவரங்களை சேகரித்துள்ள கும்பல், பிறகு கிட்னியை தர முன்வரும் ஏழை மக்களை இடைத்தரகர்கள் மூலம் அணுகியுள்ளனர். வியாழன் அன்று 9 மணியளவில் இந்தக் கும்பலை தெற்கு டெல்லியில் அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அதாவது கிட்னி கடத்தல் கும்பல் மருத்துவமனை வளாகத்தில் சுற்றிக் கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கும்பலை சுற்றி வளைத்தனர்.
கைது செய்யப்பட்ட 4 இடைத்தரகர்கள் இதுவரை டெல்லியில் மட்டும் 4 கிட்னிகளை விற்றுள்ளனர். இதற்காக வட இந்தியாவில் உள்ள கிராமத்திலிருந்து ஏழைப் பெண் இருவர் உட்பட 3 பேரை இவர்கள் ஏமாற்றி கிட்னியைப் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் சரிதா விஹார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் சில மருத்துவர்களின் பெர்சனல் செகரெட்டரிகள் இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று மருத்துவமனை தன் அறிக்கையில் கூறியுள்ளது.