

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ. 3.2 கோடி செலவில் புதிய தங்கக் கொடிமரம் பிரதிஷ்டை செய் யப்பட்டது. இதனை ஹைதரா பாத்தைச் சேர்ந்த பீனிக்ஸ் இன்ஃப்ராடெக் நிறுவனம் நன்கொடையாக வழங்கியது. ஆனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தக் கொடி மரத்தின் பீடத்தின் மீது யாரோ பாதரசத்தை ஊற்றி சேதப்படுத்தியது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டதை அடுத்து, பாதரசத்தை ஊற்றியதாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கிருஷ்ணா மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து நேற்று கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரு சட்டமன்ற உறுப்பினர் போடே பிரசாத் விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், இது வேண்டுமென்றே செய்த குற்றம் கிடையாது என்பதால் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரினார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக கேரள மாநில டிஜிபி, ஆணையர், ஐயப்பன் கோயில் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு பேசினார்.
மேலும் 5 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, கிருஷ்ணா மாவட்ட ஆட்சியருக்கும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதன்படி இரு மாநில அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.