

2022-ம் ஆண்டில் நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது ஒவ்வொரு இந்தியரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் 126-வது பிறந்த நாளையொட்டி மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும்போது, “சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் நிறைவேற நாட்டு மக்கள் பாடுபடவேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும். 2022-ல் பரம ஏழையும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. மின்சாரம், தண்ணீர் மற்றும் பிற வசதிகள் கொண்டதாக அந்த வீடு இருக்க வேண்டும். அருகிலேயே மருத்துவமனைகள், பள்ளிகள் இருக்க வேண்டும்” என்றார்.
அம்பேத்கர் குறித்து மோடி பேசும்போது, “அம்பேத்கர் தனது வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்கொண்டபோதிலும் கசப் புணர்வு, பழிவாங்கும் உணர்வுக் கான அறிகுறிகள் அவரிடம் இருந்ததில்லை” என்றார்.
கோரடி, சந்திரபூர், பார்லி ஆகிய இடங்களில் மொத்தம் 3,230 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்சார நிலையங்களை, விழாவில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகிய திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
ஒரு நாள் பயணமாக நேற்று நாக்பூர் வந்திருந்த பிரதமர் மோடி, முதல் நிகழ்ச்சியாக வரலாற்று சிறப்புமிக்க தீக் ஷாபூமிக்கு சென்றார்.
இங்கு கடந்த 1956-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி, அம்பேத்கர் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார். வரலாற்றில் ஒரே இடத்தில் அதிக மக்கள் மதம் மாறிய நிகழ்ச்சி இதுவேயாகும்.
பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் தீக் ஷா பூமிக்குச் சென்று அங்குள்ள புனித நினை விடத்தை பார்வையிட்டனர். பிறகு அங்குள்ள மார்பளவு அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினார்.
அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் நாட்டு மக்களுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.