

மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல்வாதிகளை கடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தீவிரவாத அமைப்பின் பட்டியலில் ராகுல் காந்தி, நரேந்திர மோடி, அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹார் மாநில அரசுகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் தலைவர்களான யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த 2003-ல் கைது செய்யப் பட்டனர். அவர்களை விடுவிக்க அரசியல் தலைவர்களை பிணைக்கைதிகளாக கடத்திச் செல்ல இந்தியன் முஜாகிதீன் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு கடந்த வாரம் ரகசிய தகவல் கிடைத்தது.
தீவிரவாதிகளின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்த பரிந்துரைகள் வியாழக்கிழமை அனுப்பப்பட்டு விட்டது.
இது குறித்து தி இந்துவிடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களின் முக்கிய நகரங்கள் மற்றும் டெல்லியில் நடக்கும் பிரச்சாரங்களின்போது தலைவர்களை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
எனவே, இந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றும் நபர்கள் யாராக இருப்பினும் அவர்களைப் பிடித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள் ளோம். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களும் எச்சரிக்கப்பட் டுள்ளன’ எனக் கூறுகின்றனர்.
இந்த கடத்தலுக்கு உதவியாக தடை செய்யப்பட்ட தீவிரவாத மாணவர் அமைப்பான சிமியின் ‘ஸ்லீப்பர் செல்’உறுப்பினர்களும் ஈடுபட உள்ளதாகவும், கடைசி நேரத்தில் இதை தீவிரவாதத் தாக்குதல்களாகவும் மாற்ற வாய்ப்புள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்தியப் பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் சிமி அமைப்பின் முக்கிய தலைவர்களான அப்துல் வாஹித்காங், உபைர் சித்திக்கீ ஆகியோரிடம் தேசிய புலனாய்வு நிறுவனம் அண்மையில் விசாரணை நடத்தியது.
தீவிரவாதிகள் தரப்பில் உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியும் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் பல்வேறு போலி பெயர்களில் வாங்கி பேசப்பட்ட மொபைல் போனின் பேச்சுகளை ஒட்டுக் கேட்டதில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.