

பாட்னா அருகே கங்கை நதியில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 24 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். பிஹார் மாநிலம் பாட்னாவில் என்ஐடி காட் அருகே கங்கை நதிக்கு அப்பால் உள்ள ஆற்றுப்படுகையில் மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி, பட்டம் விடும் திருவிழா மாநில சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கங்கையைக் கடந்து பொது மக்கள் விழாவுக்கு செல்ல இலவச படகு போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. சனிக் கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு விழா நடக்குமிடத்தில் இருந்து திரும்பிவந்த சிறிய படகு ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகில் பயணித்த 7 பேர் மீட்கப்பட்டனர். மற்ற பயணிகளைத் தேடும் பணி தீவிரமாக மேற் கொள்ளப்பட்டது. இதில், 24 பயணிகளின் சடலங்களை கங்கை நதியில் இருந்து மீட்புப் படையினர் கண்டெடுத்தனர். மேலும் சிலர் நீரில் மூழ்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பெரும் பாலானோர் சிறார்கள், குழந்தை கள் மற்றும் பெண்கள் என்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர். எஞ்சிய பயணிகளைத் தேடும் பணியில், பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 25 பேர் மட்டுமே பய ணிக்க வேண்டிய படகில், 40-க்கும் அதிகமானோர் பயணித்ததால், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்த தாக கூறப்படுகிறது. மாலை நேரத்தில் கடும் குளிருக்கு அஞ்சி அவசரமாக வீடு திரும்ப எத்தனித்து, அதிக எண்ணிக்கை யில் படகில் ஏறியதே விபத்துக்கு காரணம் எனவும் உயிர் பிழைத் தவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உயர்மட்ட விசா ரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் நிதிஷ்குமார், விபத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் தண் டிக்கப்படுவார்கள் என அறிவித் துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவியை விரைந்து வழங்குமாறும் நிதிஷ்குமார் உத்தரவிட்டார்.
படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரி வித்தார். பலியானோரின் குடும் பத்தாருக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், தீவிரமாக பாதிப் படைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இரங்கல் தெரிவித்தார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் வருத்தம் தெரி வித்தனர்.
4 நாட்கள் நடக்க இருந்த பட்டம் விடும் திருவிழா, விபத்து காரண மாக பாதியிலேயே நிறைவு பெற்றது. நேற்று நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.