

மகாராஷ்டிராவில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்.என்.எஸ்.) கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே தலைமையில் தொண்டர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
செம்பூர் பகுதியில், சுங்கச்சாவடியை முற்றுகையிடச் சென்ற ராஜ் தாக்கரே தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் மீது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்.என்.எஸ்.) கட்சியின் தொண்டர்கள் கடந்த மாதம் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறி, அக்கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், யாரும் சுங்கவரி கட்ட வேண்டாம். யாராவது எதிர்த்துக் கேட்டால், தாக்குங்கள் என அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்ததையடுத்து, கடந்த மாதம் தாணே மாவட்டத்தில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 12 சுங்கச் சாவடி அலுவலகங்கள் மீது எம்.என்.எஸ். தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் இன்று மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் டயர்களை எரித்து ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.