Published : 12 May 2017 07:28 AM
Last Updated : 12 May 2017 07:28 AM

ஏழுமலையானுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்கள் என்ன? - ருசிகர தகவல்கள் வெளியானது

திருப்பதி ஏழுமலையானுக்கு பலவிதமான நைவேத்யங்கள் ஒவ்வொரு வேளைக்கும் படைக் கப்படுகிறது. லட்டு, வடை, தயிர் சாதம் மட்டுமே அவருக்கு படைக்கப்படுவதாக பெரும் பாலானவர்கள் கருதுகின்றனர். ஒரு சில நேரங்களில் மிளகு அன்னம், தோசை, பாதாம் பருப்புடன் கூடிய பால் ஆகியவையும் படைக்கப்படுகிறதாம்.

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் எழுதிய ‘The Sacred Foods of God’ என்ற ஆங்கில புத்தகத்தில் தான் இந்த அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறியதாவது:

ஏழுமலையானுக்கு என்னென்ன நைவேத்யங்கள் எப்பொழுது படைக்க வேண்டும். அதை யார் தயாரிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட விவரங்கள் ஆகம சாஸ்திரங் களில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. அதன்படியே திரு மலையில் பிரசாதங்கள் தயாரிக்கப் பட்டு ஏழுமலையானுக்கு நைவேத் யமாக படைக்கப்படுகிறது. அடுப் பில் கட்டைகளை எரித்தே சுவாமிக்கு நைவேத்யம் தயாரிக்கப் படுகிறது. அந்த கட்டைகள், பால்வடியும் மரத்தில் இருந்து எடுத்து வந்திருக்கக் கூடாது. நைவேத்யம் சமைப்பவர்கள், அதன் வாசனையை நுகரக் கூடாது. மூக்கு, வாய் போன்ற அங்கங்களை துணி யால் கட்டிக்கொள்ள வேண்டும்.

நைவேத்தியம் படைப்பது எப்படி ?

ஆகமவிதிப்படியே சுவாமிக்கு நைவேத்யம் படைக்கப்படுகிறது. நைவேத்யம் படைப்பதற்கு முன் காயத்ரி மந்திரம் உச்சரித்தவாறே கருவறையை சுத்தம் செய்வார்கள். அதன் பின் கருவறைக்குள் நைவேத்யம் நிரம்பிய பித்தளை அண்டாக்கள் கொண்டு வந்து சுவாமியின் முன் வைக்கப்படும். அப்போது நைவேத்யத்தை படைக்கும் அர்ச்சகர் மட்டுமே கருவறைக்குள் இருப்பார். பின்னர் கருவறை கதவுகள் மூடப்பட்டு, விஷ்ணு காயத்ரி மந்திரம் உச்சரித்தவாறு, நைவேத்யத்தின் மீது நெய், துளசி இலைகள் போடப்படும். மந்திரங்களை உச்சரித்தவாறே அர்ச்சகர் தனது வலது கை விரலால் நைவேத்யத்தை தொட்டு, பெருமாளின் வலது கை, வாய் அருகே சமர்ப்பணம் செய்வார். உலகிற்கே படி அளக்கும் பெருமாளுக்கு இது போன்று நைவேத்யம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் மூலிகை இலையால் தண்ணீர் தெளித்து அவருக்கு சமர்ப்பணம் செய்யப்படும்.

நைவேத்யம் சமர்ப்பணம் செய்யும்போதெல்லாம் கோயில் மணி அடிக்கப்படும். ஒரு நாளைக்கு 3 வேளை நைவேத்யம் சமர்ப்பிக்கப்படும். இதனை பால போகம், ராஜ போகம், சயன போகம் என்றழைக்கின்றனர். 9.5 அடி உயரம் உள்ள மூலவருக்கு அதற்கேற்றார்போல்தான் நைவேத் யங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எந்தெந்த வேளையில் எவ்வளவு எடையில் நைவேத்யம் படைக்க வேண்டுமோ, அந்த அளவில் மட்டுமே சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் இவை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். விசேஷ தினங்களில் பலவிதமான விசேஷ நைவேத்யங்களும் சுவாமிக்கு படைக்கப்படுகிறது.

சுவாமியின் ‘மெனு’

அதிகாலை சுவாமியை சுப்ர பாதத்துடன் துயில் எழுப்பிய பின்னர், அவருக்கு வெண்ணெய், நுரை ததும்ப பசும்பால் சமர்ப்பிக்கப் படுகிறது. தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை சேவைகளுக்குப் பிறகு சுவாமிக்கு எள், சுக்கு, வெல்லம் கலந்த பானகம் சமர்ப்பிக்கப் படுகிறது. இவைகளைத் தொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் பால போக நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இதில் புளியோதரை, தயிர் சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், ரவா கேசரி இடம்பெறும். இதற்குப் பிறகே சர்வ தரிசனம் தொடங்கும். நண்பகல் 11 மணியில் இருந்து 11.30 மணிக்குள் ராஜ போகம் நைவேத்தியம். இதில், வெண் சாதம், சர்க்கரை அன்னம், புளியோதரை, கூடை அன்னம், போன்றவை சமர்ப்பிக்கப்படுகிறது. மாலை 7 மணியளவில் சயன போக நைவேத்யம். இதில் மிளகு அன்னம், தோசை, லட்டு, வடை மற்றும் பல காய்கறிகளால் சமைக்கப்பட்ட அன்னம் சமர்ப்பிக்கப்படும்.

இத்துடன் சுவாமியின் ‘மெனு’ முடியவில்லை. இரவு ‘திருவீசம்’ எனும் பெயரில் சுவாமிக்கு வெல்லத் தால் தயாரிக்கப்பட்ட அன்னம் படைக்கப்படும். பின்னர் சுவாமி பள்ளியறைக்குச் செல்லும் முன் ஏகாந்த சேவையின்போது, நெய்யி னால் மிதமாக வறுக்கப்பட்ட பாதாம், முந்திரி மற்றும் பழங்கள், பால் போன்றவை சமர்ப்பிக்கப்படுகிறது.

பிரசாதம் என்றால் பசியை போக்கும் உணவு அல்ல. இவை தூய்மையாக ஆகமவிதிப்படி தயாரித்து சுவாமிக்கு பய பக்தியுடன் படைக்கப்படுகிறது. இதைச் சாமானிய பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ‘The Sacred Foods of God’ புத்தகத்தில் விவரித்துள்ளேன். ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இப்புத்தகம் விரைவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x