

அகிலேஷ்சிங் யாதவால் வெளியிடப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு உ.பி.யின் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்களுக்கான நாடகம் என பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதியும், பொய்களை தவிர எதுவும் இல்லை என பாரதிய ஜனதாவின் சுவாமி பிரசாத் மவுரியாவும் கூறியுள்ளனர்.
பிப்ரவரி 11 முதல் நடைபெறவுள்ள உபி சட்டப்பேரவைக்கான தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இங்கு ஆளும் கட்சியான தன் முதல் அமைச்சர் அகிலேஷ்சிங் யாதவ் இதை வெளியிட்டார். இது வெளியான சில நிமிடங்களுக்குள் அம் மாநிலத்தின் எதிர்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில் மாயாவதி, அகிலேஷின் அறிக்கையை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்படும் நாடகம் எனக் கண்டித்துள்ளார். எனினும், தாம் முதல் அமைச்சராக இருந்த போது வைத்த யானை சிலைகளை கண்டித்த அகிலேஷை பாராட்டியும் உள்ளார். இதில் அவர், யானைகளை கண்டிக்கும் பெயரில் அகிலேஷ் தம் கட்சி சின்னத்திற்கு விளம்பரம் அளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியில் அகிலேஷ், ‘காம் போல்தா ஹை(செய்த பணிகள் பேசுகின்றன)’ எனக் குறிப்பிடிருப்பதையும் மாயாவதி கிண்டல் செய்துள்ளார். கடந்த 5 வருடங்களாக கிரிமினல் குற்றப்புகார்களில் சிக்கியவர்கள் தலைமையில் உபி அரசு இருந்ததாகவும், இதில் ‘அப்ராதி போல்தா ஹை(கிரிமினல்கள் தான் செயல்பட்டனர்)’ எனவும் குறிப்பிட்டுள்ளார் மாயாவதி.
முந்தைய தேர்தலில் வெளியிட்ட அதன் அறிக்கையை கேலி செய்யும் வகையில் கொடுங்கோல் ஆட்சி, காட்டாட்சி, கிரிமினல்கள் மற்றும் மதவாதிகள் முன்னேற்றம் ஆகியவை மட்டுமே இருந்தன எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் உபியின் 22 கோடி மக்கள் பலனடைந்ததாக கூறப்படுவது பொய் என்றும், மாறாக இது ஒரு குறிப்பிட்ட குடும்பம் மற்றும் சமூகத்திற்கு(யாதவர்) மட்டுமே கிடைத்ததாகவும் விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்தர மோடி பாணியில் சமாஜ்வாதி அரசும், அரசாங்கத்தின் நிதியை தம் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.
அகிலேஷின் தேர்தல் அறிக்கையை பாஜகவும் கடுமையாக விமர்சித்துள்ளது. இக்கட்சியின் உபி மாநிலத் தலைவரான கேசவ் பிரசாத் மவுரியா கூறியதாவது: பலனை எதிர்பார்த்து வெளியிடப்பட்டுள்ள இலவச ஸ்மார்ட் போன் அறிவிப்பு எதிர்மறையாற்றி உள்ளது. தங்கள் தேவை போன் அல்ல, வேலைவாய்ப்பு என உபி இளைஞர்கள் கண்டித்துள்ளனர். கடந்த முறை தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகையை அளிப்பதில் சமாஜ்வாதி அரசு தோல்வி அடைந்துள்ளது.
இதுபோல், இலவசங்கள் அறிவிப்பிற்கு பதிலாக தான் கடந்த 5 வருடங்களில் உண்மையாக செய்தது என்ன என்பதை மக்களுக்கு அகிலேஷ் எடுத்துக்கூற வேண்டும். வேலையாய்ப்பினமை, பாதுகாப்பின்மை என பொதுமக்கள் அவதிக்கு இடையே ஆளும் அரசு எக்ஸ்பிரஸ்வே மற்றும் சைக்கிளுக்கான சாலைகள் அமைப்பதில் தொகை ஈட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்