

தீபாவளி பண்டிகையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள காஷ்மீர் பயணம், அம்மாநிலத்தில் வரவேற்பையும், அதற்கு இணையான எதிர்ப்பையும் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியில் காஷ்மீர் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரிவினைவாதிகள் நடத்தி வரும் கடையடைப்பு போராட்டத்தால் காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வெள்ளம் பாதித்த காஷ்மீர் மக்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அம்மாநிலத்துக்கு புறப்பட்டார். சியாச்சினில் தனது காஷ்மீர் பயணத்தை தொடங்கிய மோடி, மலை உச்சியில் உள்ள எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களைச் சந்தித்து பேசினார். பின்னர், காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனும் தனது தீபாவளியைக் கொண்டாடினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். பிரிவினைவாதிகளின் எதிர்ப்பால், மோடியின் வருகைக்காக மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனியடையே, பிரிவினைவாதிகள் ஆதிக்கம் மிகுந்த லால் சவுக் பகுதியில் அறிவித்தப்படி பொது வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. காஷ்மீரின் முக்கிய இடங்களில் இந்த வேலைநிறுத்தம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், பெரும்பாலான காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடைகள், முக்கிய வணிக வளாகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு பல இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஸ்ரீநகரில் சிறப்புச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்டம் - ஒழுங்கை பராமரிக்க அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக புதன்கிழமை அன்று ஹுரியத் பிரிவினைவாத அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பிரதமர் மோடியின் எதிர்ப்புக்கான கூட்டத்தில் அதன் தலைவர் சயீத் அலி ஷா கிலானி கூறும்போது, "காஷ்மீர் பகுதி கடுமையான வெள்ளம் பாதிப்பால் மோசமான நிலையில் உள்ளது. இங்கு பல இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. பேரிடரால் காஷ்மீர் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு வாய் மூடிய பார்வையாளராகவே இருந்தது.
இந்த மக்களுக்காக எந்த உதவியையும் மத்திய அரசு செய்யவில்லை. இந்த நிலையில் காயமடைந்தவர்கள் மீது உப்பை அள்ளி வீச வேண்டாம். பிரதமர் மோடி ஈகை திருநாளுக்காக எங்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது தீபாவளி கொண்டாட இங்கு வருகிறார். அவரது செயல்கள் ஏற்கத்தக்கது அல்ல. பிரதமர் மோடிக்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், பிரதமர் தனது பயணத்தின்போது காஷ்மீருக்கான நிவாண நிதியை அறிவிப்பார் என்று அம்மாநில மக்கள் நம்புகின்றன. அந்த மாநிலத்தின் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் எதிர்ப்பார்ப்பிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது.