

ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கு ராணுவத்தின் தரப்பிலிருந்து பணம் தரப்படுவதாக முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ள புகார் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா.
வி.கே.சிங் வெளியிட்ட இந்த பரபரப்பு தகவல் பற்றி இப்போதுதான் முதல் தடவையாக தனது மௌனத்தை கலைத்து கருத்தை வெளியிட்டுப் பேசியுள்ளார் ஒமர் அப்துல்லா.
இது குறித்து நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
வி.கே.சிங் வெளியிட்ட தகவலை நிராகரித்து விட முடியாது. முக்கிய அரசியல்வாதிகள் பலருக்கு நிதி விவகாரத்தில் ராணுவத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே பொதுவான கருத்து.
இந்நிலையில் நாடு விடுதலை பெற்றதிலிருந்தே, எல்லா அமைச்சர்களும் ராணுவத்திடம் இருந்து பணம் பெற்றதாக வி.கே. சிங் கூறியிருப்பதை, சாதாரணமாக கருதி விட்டுவிடமுடியாது. இதுபற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு, அதிலிருந்து வெளிவரும் தகவல்கள் எதுவாக இருந்தாலும் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை அரசு வெளிப்படுத்தவேண்டும். அரசியல் கட்சிகள் மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் ஒமர்.