

ஹுத் ஹுத்’ புயல் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
‘ஹுத் ஹுத்’ புயலால் பாதிப்படைந்த விசாகப்பட்டினம், விஜயவாடா, ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.
அப்போது, ஸ்ரீகாகுளம் மாவட்டம், குந்துவானி பேட்டா கிராமத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
’ஹுத் ஹுத்’ புயலால் கடலோர ஆந்திரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளன. மக்கள் விழிப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டதால்தான் புயலை நாம் சமாளிக்க முடிந்தது. புயல்காரணமாக 3 மாவட்டங்களில் 41 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் முற்றிலுமாக வீடிழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் விரைவில் இலவசமாக கட்டித்தரப்படும்.
சேதமடைந்த கிராமங்கள் ஸ்மார்ட் கிராமங்களாக உருவாக்கப்படும். மீனவர்களுக்கு 50 வயதிலிருந்தே முதியோர் உதவி தொகை வழங்கப்படும். கால்வாய், மின்சாரம் போன்றவை புதிய தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
கிராமத்தை தத்தெடுத்த வெங்கய்ய நாயுடு
ஆந்திரப் பிரதேசத்தில் ஹுத்ஹுத் புயலால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் அவரின் குடும்பத்தினர் தத்தெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “சேபலுபடா கிராமத்தை நானும் என் குடும்பத்தினரும் தத்தெடுத்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வோம். அக்கிராமத்துக்கு எம்.பி. நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும். விசாகப்பட்டினத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மத்திய அரசு கூடுதல் நிதியளிக்க தயாராக உள்ளது” என்றார்.