

பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக திருப்பதி ஏழுமலை யான் கோயில் உண்டியல் வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து லட்டு பிரசாதம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங் காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு முன் திருப்பதி கோயில் வருமானம் நாளொன்றுக்கு ரூ.5 கோடியாக இருந்தது. தற்போதோ ரூ.3.5 கோடியாக வருவாய் குறைந்துள்ளது. எனவே கோயிலின் வருவாயை பெருக்க லட்டு மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இது தொடர் பாக ஆந்திர அரசிடமும் அனுமதி கேட்டுள்ளோம். அரசு சம்மதித் தால் விலை உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீநிவாசர் பவனி
திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ஸ்ரீநிவாசர் யோக நிலையில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் உற்சவ மூர்த்திகள் சூரிய பிரபை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குவதையொட்டி கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு நேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்கப்பட்டது.