

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அந்த மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்து களின் முன்னேற்றத்துக்காக பாடு படவில்லை. இரு சமுதாயத்தின ரையும் அவர் ஏமாற்றி வருகிறார்.
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அந்த கட்சி எப்போதோ மூழ்கிவிட்டது. அந்த வரிசையில் சமாஜ்வாதி கட்சியும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மூழ்கிவிடும். ஒருவேளை சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்தாலும் மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள்.
இந்த தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றால் அயோத் தியில் ராமர் கோயில் கட்டப்படும். மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஊழலில் திளைத்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஊழல் விவகாரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.