Last Updated : 07 Oct, 2014 08:28 AM

 

Published : 07 Oct 2014 08:28 AM
Last Updated : 07 Oct 2014 08:28 AM

சிறையில் ஜெயலலிதாவுக்கு வசதிகள்: அதிமுகவை நெருங்கி வருகிறதா காங்கிரஸ்?- அரசியலில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு

பெங்களூரை அடுத்துள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலி தாவுக்கு தேவையான உதவிகளை, அந்த மாநில காங்கிரஸ் அரசு செய்து தந்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் நட்பு மலர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு எந்தவி தமான குறையும் இல்லாதபடி கவனித்துக் கொள்ளும்படி கர்நாடக முதல்வர் சித்தராமை யாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி யதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.

இது தொடர்பாக ‘தி இந்து’ செய்தியாளரிடம் கர்நாடக மாநில அமைச்சர்கள் சிலர் கூறியதாவது: கடந்த செப்டம்பர் 27-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என அறிவிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு சிறையில் அளிக்கப்பட வேண்டிய மருத்துவ வசதி, பாதுகாப்பு ஏற்பாடு ஆகியவற்றிற்கு கர்நாடக அரசும், சிறை நிர்வாகமும்தான் பொறுப்பு என்று நீதிபதி டி'குன்ஹா தெளிவாகக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த முக்கிய‌ அமைச்சர்கள் சிலர் கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ், மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பேசியுள்ளனர்.

அதே போன்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அதிமுக எம்.பி. ஒருவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசியுள்ளனர். அதையடுத்து ஜெயலலிதாவுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி சோனியா காந்தி அறிவுறுத்தியிருந்தார்.

மருத்துவமனையில் சேர்க்க முயற்சி

முதலி்ல் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பாமல், அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிமுக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனை, டாக்டர் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கலாம் என ஆலோசனை கூறினோம். அதிமுக தரப்பில் அப்போலோ, நாராயண ஹிருதாலயா, ஜெயதேவ் ஆகிய மருத்துவமனைகளில் ஜெயலலிதாவை அனுமதிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டனர்.

இதையடுத்து ஜெயதேவ் மருத்துவமனையில் ஜெயலலி தாவை அனுமதிக்க ஏற்பாடு செய்தோம்.

சிறைக்கு செல்ல விரும்பிய ஜெ!

ஆனால், ஜெயலலிதா மருத்து வமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். சிறை தண்டனை என்றதும் படுக்கையில் படுத்துக் கொண்டு எல்லா அரசியல்வாதி களைப் போல நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்ற அவர் விரும்பவில்லை. சசிகலா வும், அமைச்சர்களும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மருத்து வமனைக்குச் செல்லும் யோசனையை ஜெயலலிதா ஏற்க வில்லை. தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வதாக கூறி, சிறைக்குச் செல்ல முடிவெடுத் தார்.

இதையடுத்து அதிமுகவினரின் கோரிக்கையை ஏற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் மிகவும் பாதுகாப்பான முதல் வகுப்பு அறையை ஜெயலலிதாவுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுத்தோம். அவருக்கு தேவையான மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தந்துள்ளோம்.

இன்னும் ஏதேனும் வசதிகள் தேவை என்றால், அதை செய்து தருவதாக ஜெயலலிதாவிடம் தெரிவித்தோம். ஆனால், தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று அவர் தெரிவித்துவிட்டார்.

ஜெயலலிதாவின் பாதுகாப்புக் காக சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக ககன் தீப்பும், பாதுகாப்பு அதிகாரிகளாக திவ்யாயும், பத்மாவதியும் நியமிக்கப்பட்டனர். இது தவிர 3 பெண் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாக தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களும் எங்களுடன் பேசி வருகின்றனர்.

டெல்லி, கர்நாடகம், தமிழகத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் மீண்டும் நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளன” என்றனர்.

இரு கட்சிகளுக்கும் இடையே மலர்ந்துள்ள இந்த நட்பு, எதிர்காலத்தில் அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x