

திருமலையில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமலையில் ‘சிலா தோரணம்’ எனும் இடம் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் வனப்பகுதியில் நேற்று காலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதில் துணை மின் நிலையத்திலும் தீ பரவியது. பீதியடைந்த மின்வாரிய ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக் கியதில் ஸ்ரீநிவாசுலு என்ற ஊழியர் படுகாயமடைந்தார். அவரை சக ஊழியர்கள் திருமலையில் உள்ள தேவஸ்தான மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஸ்ரீநிவாசுலு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.