

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் வெளிப்படையற்ற தன்மையில், நேர்மையற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்று சிபிஐ நீதிமன்றம் சாடியுள்ளது.
நிறுவனங்களின் விண்ணப்பங்களை நுணுகி ஆராயாமல், சுரங்க ஒதுகீடுகளை ரகசியமான முறையில், ஏன் அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை விளக்காமல் செய்திருப்பது பப்ளிக் செர்வண்ட்களின் குற்றவியல் சார்ந்த மோசமான நடத்தையைக் குறிப்பதாகும்.
“இந்தச் செயல் நாட்டின் இயற்கை வளங்களை தனியார் நிறுவனங்கள் முறையற்ற வகையில் உடைமையாக்கிக் கொள்வதற்கு வழிவகை செய்துள்ளது” என்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் சாடியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நிலக்கரித் துறை செயலர் எச்.சி.குப்தா, அப்போது இணைச் செயலராக இருந்த கே.எஸ்.குரோபா மற்றும் இயக்குனர் கே.சி.சமாரியா ஆகியோருக்கு கோர்ட் சம்மன் அளித்திருந்தது. ஆனால் இவர்கள் மீதான விசாரணை அறிக்கையை சிபிஐ முடிவுக்குக் கொண்டு வந்ததை சிபிஐ கோர்ட் ஏற்க மறுத்து மேற்கூறிய முறையில் சாடியுள்ளது.
நிலக்கரி சுரங்க முறைகேட்டில், நிலக்கரித் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை சட்டவிரோதமான முறையில் செய்துள்ளனர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சுரங்க ஒதுக்கீட்டிற்கான கடிதங்களை அளிப்பதற்கு முன்பாகவே நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஸ்க்ரீனிங் கமிட்டி ஒதுக்கீடுகளை நேர்மையற்ற முறையில் வழங்கியுள்ளது. அந்த நிறுவனங்களின் தகுதி அடிப்படை குறித்து அவர்களது விண்ணப்பங்களை கூர்ந்து ஆய்வு செய்யவில்லை. என்றும் நீதிமன்றம் சாடியுள்ளது.