Last Updated : 10 Oct, 2014 08:37 AM

 

Published : 10 Oct 2014 08:37 AM
Last Updated : 10 Oct 2014 08:37 AM

என்னை பார்க்க வர வேண்டாம்: முதல்வர், அமைச்சர்களுக்கு ஜெ. உத்தரவு? - சசிகலாவை சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர்கள்

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை பார்க்க‌ தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரக்கூடாது என தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எனவேதான் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பெங்களூருக்கு வருவதை நிறுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு வந்து சசிகலாவை சந்தித்து செல்கின்றனர். தொண்டர்கள் உட்பட மற்றவ‌ர்கள் வராததால் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பரபரப்பான சூழ்நிலை மாறி வெறிச் சோடி காணப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 27-ம் தேதி பெங்களூரை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டன‌ர்.

ஜெயலலிதாவை பார்ப்பதற் காக நாடாளுமன்ற துணை சபாநாயகர், அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அனை வரும் பெங்களூரை மையம் கொண்டிருந்தனர். தினமும் காலையில் சிறைக்கு சென்று அவரை சந்திக்க முடியா விட்டாலும் வருத்தமான முகத்துடன் மாலையில் விடுதிகளுக்கு திரும்பினர்.

தமிழகத்தின் புதிய‌ முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் தனது அமைச்சர்களு டன் பதவியேற்ற அன்று மாலையே பெங்களூர் வந்தார். ஜெயலலிதாவை சந்திப்பதற்காக அனுமதிகேட்டு ஒரு நாள் முழுவதும் விடுதியிலே காத்திருந்தார். இருப்பினும் அவரை சந்திக்க ஜெயலலிதா விரும்பாததால் சென்னைக்கு திரும்பினார்.

போய் வேலையை பாருங்கள்

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததையொட்டி தமிழ‌க அமைச்சர்கள் பெங்களூரில் தங்கி இருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை நால்வரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட போதும் பல அமைச்சர்கள் தமிழகத்திற்கு திரும்பாமல் இருந்தனர். தினமும் காலையில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழக அமைச் சர்களும், அதிமுகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேயர்களும், முக்கிய நிர்வாகிகளும் பெங்களூரிலேயே இருக்கும் தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறைக்கு வந்துகொண்டிருந்த அவர்களுக்கு சசிகலா மூலம் ஜெயலலிதா சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதாவது அமைச்சர்களாக இருப்பவர்கள் தங்களது துறை சார்ந்த வேலைகளை முதலில் கவனியுங்கள். தேவையில்லாமல் பெங்களூரிலேயே இருந்தால் மக்களுக்கு அதிமுக மீது அதிருப்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் எதிர்க்கட்சிகளும் இதனை பெரும் பிரச்சினையாக கிளப்பி விடும். இது வருகின்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது என சொல்லப்பட்டதாக அதிமுகவை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

ஜெயலலிதாவின் இந்த உத்த ரவை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெங்களூரில் இருந்த அமைச்சர்கள் அனைவரும் தமிழகத்திற்கு திரும்பிவிட்டனர். அமைச்சர்கள் யாரும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வராததால் அவர்களது ஆதரவாளர்களும் தங்களது ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பச்சைமால், கே.பி. முனுசாமி, கே.பி.அன்பழகன், தளவாய் சுந்தரம் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர். அவர்களை ஜெயலலிதா ச‌ந்திக்க விரும்பாததால், சசிகலாவை சந்தித்து பேசினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் வெளியே வந்தனர்.

இதே போல அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தி, கிருஷ்ணகிரி அதிமுக எம்.பி. அசோக் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் புத்தி சந்திரன், சுந்தரம், ராமகிருஷ் ணன் உள்ளிட்டோரும் சிறைக்குள் சென்றனர். ஆனால் அவர்கள் யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சுதாகரன் குடும்பத்தினர் சோகம்

சுதாகரனை சந்திப்பதற்காக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் 8 பேர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வியாழக்கிழமை வந்தனர்.சிறையில் அடைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக வருவதால் அவருக்கு தேவையான உணவு பொருட்கள், உடைகள் மற்றும் இதர பொருட்களை கொண்டு வந்திருந்தனர்.

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சுதாகரன் உள்ளிட்ட அனைவரும் மிகவும் சோகமயமாக காணப்பட்டனர். ஒரு கட்டத்தில் அனைவரும் கண் கலங்கி அழுததாக சிறையில் இருந்தவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x