

அரசியல்வாதிகளின் வாய்மொழி உத்தரவுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள் தலையீட்டில் இருந்து அதிகாரிகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படுவது அவசியம் என்றும்உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஐஏஎஸ்/ ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதால் நிர்வாக சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, ஐஏஎஸ்/ ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், நியமனம், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றுவது அவசியம் என தெரிவித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட பொறுப்பில் அதிகாரிகள் பணியாற்றும் காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இதுக்குறித்து, 3 மாதத்திற்குள் முடிவெடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சம்பந்தப்பட்ட நில ஆக்கரமிப்பு சர்ச்சை தொடர்பாக பாதிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா, உ.பி. அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி, என அரசியல் தலையீட்டால் அண்மைகாலத்தில் சில அதிகாரிகள் கடும் நெருக்கடியை சந்திதுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த வழிகாட்டுதலை பரிந்துரைதுள்ளது.
இந்த பொது நல் மனுவை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் 83 பேர் கொண்ட குழு தாக்கல் செய்துள்ளது. மனு தாரர்களில், முன்னாள் அமைச்சரவை செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ண்மூர்த்தி, முன்னாள் சிபிஐ இயக்குநர் ஜோகேந்தர் சிங் ஆகியோரும் அடங்குவர்.