தமிழக விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு விருது

தமிழக விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு விருது
Updated on
1 min read

தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளையின் சேவையை பாராட்டி லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார்.

விமான தொழில்நுட்பம், ஏவுகணை தொழில்நுட்பத்தில் புரிந்த சாதனைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, பராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவை கொண்டதாகும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு விருதினை வழங்கினார்.

பிரம்மோஸ், பிருத்வி, நாக், ஆகாஷ் ஏவுகணை தொழில் நுட்பத்தில் சிவதாணு பிள்ளை முக்கிய பங்காற்றியுள்ளார். பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

இஸ்ரோவின் முதல் ஏவுகணையான எஸ்.எல்.வி.3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ஏவுகணை திட்டங்களிலும் சிவதாணு பிள்ளை பணியாற்றியுள்ளார். அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெறும் 15-வது நபர் என்ற பெருமையையும் சிவதாணு பிள்ளை பெற்றுள்ளார்.

விருது விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, இந்திய விஞ்ஞானிகள் தங்களது கடும் உழைப்பால் உலக வரலாற்றில் பல்வேறு சாதனை களைப் படைத்து வருகின்றனர், அவர் களுக்கு நாட்டு மக்கள் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in