

பிரதமர் பதவிக்கு போட்டியாளர்கள் என முலாயம்சிங் யாதவ், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பெயர்களை லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். ஆனால், இந்தப் பட்டியலில் காங்கிரஸாரால் பேசப்படும் ராகுல் காந்தியின் பெயரை அவர் கூறவில்லை.
இந்தக் கருத்து ஒரு ஆங்கில நாளிதழுக்கு லாலு அளித்த பேட்டியில் வெளியாகி உள்ளது.
இதில், வரும் 2019 ஆம் ஆண்டுவரவிருக்கும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்தர மோடிக்கு போட்டியாக மற்ற கட்சித் தலைவர்கள் கூறித்து லாலுவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த லாலு, உ.பி.யின் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங், மேற்கு வங்காள முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் ஆகியோருடன் தமிழக முதல் அமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் பிரதமர் பதவிக்குத் தகுதியான போட்டியாளர்கள் எனவும் லாலு கருத்து கூறி உள்ளார்.
இந்தப் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் பேசப்படும் அதன் துணைத்தலைவர் ராகுல் காந்தி பற்றி கேட்ட போது லாலு, 'நான் அவரை நினைக்கவில்லை. அவரது கட்சியும் ராகுல் பெயரை இன்னும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் உள்ளது' எனப் பதிலளித்துள்ளார். இது, காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில், அக்கட்சிக்கு நெருக்கமான கூட்டணிக் கட்சி தலைவராகக் கருதப்படுபவர் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவரான லாலு. இது அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நிலவிய நட்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதை காட்டுவதாகக் கருதப்படுகிறது.
ஜெயலலிதா உட்பட நான்கு கட்சித் தலைவர்களின் பெயரை குறிப்பிட்ட லாலு, அடுத்து பாஜக அல்லாத ஆட்சி தங்கள் ஆதரவின்றி அமைக்க முடியாது எனவும் கருத்து கூறி உள்ளார். இதற்காக ஒத்து கருத்துள்ள கட்சிகள் பாஜகவிற்கு எதிராக ஒன்று சேர வேண்டும் எனவும் லாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேசமயம், பிரதமர் பதவிக்கு பேசப்படும் மற்றொரு பெண் தலைவரான பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் பெயரையும் லாலு குறிப்பிடவில்லை. பிஹார் மாநில முதல் அமைச்சராக இருந்த போது அவர் மீது பதிவான கால்நடை தீவன வழக்கில் சிக்கி தண்டனை அடைந்தவர். இதனால், தனது மக்களவை உறுப்பினர் பதவி இழந்தது வரை லாலுவும் தன்னை பிரதமர் பதவிக்கு தகுதியானவராகக் கூறி வந்தது நினைவுகூறத்தக்கது.