

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்திலிருந்து அடுத்த 2 வாரங்களில் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இது தவிர, இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெங்காயமும், சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. எனவே, விரைவில் வெங்காயத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
அரிசி மற்றும் கோதுமையின் விலை நிலையாக இருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதற்கு பணவீக்கமே காரணமாகும்” என்றார்.
இதனிடையே, தில்லியில் வெங்காயத்தின் இன்று விலை கிலோ ரூ.80 ஆக இருந்தது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு கிலோ ரூ.22 ஆக இருந்தது. அடுத்த இரண்டு வாரங்களில் வெங்காய வரத்து அதிகரித்தாலும், அதை பிற இடங்களுக்குக் கொண்டு செல்வதில் சிரமம் இருக்கும் எனத் தெரிகிறது. மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகத்தில் மழை பெய்து வருவதே இதற்கு காரணமாகும்.