

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் மிரட்டல் எதிரொலியாக தாஜ்மகாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
‘அவால் உம்மத் மீடியா சென்டர்’ என்ற ஐ.எஸ். சார்பு ஊடகக் குழு கடந்த 14-ம் தேதி, கிராபிக் படம் ஒன்றை வெளியிட்டது. புதிய இலக்கு என்ற தலைப்பிலான அந்தப் படத்தில் தாஜ்மகால் இடம்பெற்றுள்ளது. சீருடை அணிந்த தீவிரவாதி ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் ஏவுகணையுடன் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது தாஜ் மகாலை முக்கிய இலக்காக வைத்து இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ். விடுத்த மிரட்டலாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆக்ராவில் தாஜ்மகால் அமைந்துள்ள யமுனை நதிக்கரையில் உ.பி. போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மேலும் கண் காணிப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தினர். காவல் கண் காணிப்பாளர் சுஷில் துலே மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் வியாழக் கிழமை மாலை தாஜ்மகாலைச் சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
என்றாலும் இது வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுதான் என இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகமும் போலீஸ் உயரதிகாரிகளும் கூறினர்.