செம்மர கடத்தல் கும்பல் மீது திருப்பதியில் துப்பாக்கிச் சூடு

செம்மர கடத்தல் கும்பல் மீது திருப்பதியில் துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் நேற்று அதிகாலை அதிரடிப் படையினர் மீது செம்மர கடத்தல் கும்பல் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பதி அடுத்துள்ள பாகாராப் பேட்டை பகுதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக திருப்பதி அதிரடிப் படையினருக்கு நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாகாராப்பேட்டை வனப்பகுதியில் அதிரடிப்படை வீரர்கள் கடத்தல் கும்பலைத் தேடி சென்றனர். அங்கு சுமார் 30-க்கும் மேற்பட்டோர் செம்மரங்களைக் கடத்தி சென்றதை பார்த்ததும் அவர்களைச் சரணடைய சொல்லி அதிரடிப்படையினர் எச்சரித்தனர். ஆனால், கடத்தல் கும்பலைச் சேர்ந்தோர், வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் போலீஸார் வானத்தை நோக்கி 2 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டனர். உடனே கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரை மட்டும் அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக அதிரடிப் படை எஸ்.ஐ. வாசு செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in